ஒப்பந்த பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
பழனி அரசு ஆஸ்பத்திரியில் ஒப்பந்த பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பழனி அரசு ஆஸ்பத்திரியில் ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனத்தை சேர்ந்த பணியாளர்கள் பலர் வேலை செய்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர்கள், ஆஸ்பத்திரியில் கூடுதல் வேலை வழங்குவதாகவும், நிர்ணயிக்கப்பட்ட சம்பளம் வழங்கவில்லை என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வருவாய்த்துறையினர், ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் அவர்களை சமாதானப்படுத்தினர்.
இந்நிலையில் நேற்று காலையில் ஒப்பந்த பணியாளர்கள் ஆஸ்பத்திரி நுழைவு வாயில் முன்பு அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நிர்ணயிக்கப்பட்ட சம்பளம், சம்பள நிலுவைத்தொகை ஆகியவற்றை முறையாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர். தகவலறிந்த பழனி டவுன் போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் கோரிக்கையை நிறைவேற்றினால் மட்டுமே கலைந்து செல்வதாக கூறினர்.
அதைத்தொடர்ந்து பழனி தாசில்தார் சசிக்குமார் தலைமையில் சம்பந்தப்பட்ட நிறுவனம் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது பணியாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.