கருவேல மரங்களை அகற்ற ஏலம் எடுக்க குவிந்த ஒப்பந்ததாரர்கள்
திருப்பாச்சேத்தி முதல் விருதுநகர் வரை உள்ள ரெயில்வே பாதையில் இருக்கும் மரங்களை அகற்றுவதற்காக ஏலம் எடுப்பதற்காக ஏராளமான ஒப்பந்ததாரர்கள் குவிந்தனர்.
மானாமதுரை,
திருப்பாச்சேத்தி முதல் விருதுநகர் வரை உள்ள ரெயில்வே பாதையில் இருக்கும் மரங்களை அகற்றுவதற்காக ஏலம் எடுப்பதற்காக ஏராளமான ஒப்பந்ததாரர்கள் குவிந்தனர்.
ஏலம்
திருப்புவனம் அருகே உள்ள திருப்பாச்சேத்தி முதல் விருதுநகர் வரை உள்ள ரெயில்வே பாதை தற்போது மின்மயமாக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிக்காக ரெயில்வே தண்டவாளங்களின் இருபுறத்தில் உள்ள 524 கருவேல மரங்களை அகற்ற ஏலம் விடுவதாக தென் மண்டல ரெயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டது.
இதற்காக மானாமதுரை ரெயில்வே சந்திப்பு பகுதியில் உள்ள மூத்த பகுதி பொறியாளர் அலுவலகத்தில் கடந்த வாரம் ஏலம் நடைபெற்றது. அதில் வைப்பு தொகையாக ரூ.15 கட்ட வேண்டும் என்றும், அதை நேரடியாக செலுத்தலாம் என்றும் கூறப்பட்டது. தொகை குறைவாக இருந்ததால் கடந்த வாரம் ஏலம் எடுப்பதற்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்ததாரர்கள் குவிந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு அப்போது ஏலம் கைவிடப்பட்டு மறுதேதி அறிவிக்கப்பட்டது.
டோக்கன்கள்
இந்நிலையில் மீண்டும் ஏலம் எடுப்பதாக அறிவிக்கப்பட்டு அதில் கலந்துகொள்ளும் ஒப்பந்ததாரர்கள் வைப்பு தொகை ரூ.75 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. அந்த பணத்தை வங்கிகளில் முறையாக டி.டி எடுத்து வந்து கட்ட வேண்டும் என்பது உள்பட பல்வேறு விதிமுறைகள் கூறப்பட்டது. பின்னர் மானாமதுரை ரெயில்வே பொறியாளர் அலுவலகத்தில் நடந்த ஏலத்தில் காலை 8 மணி முதல் ஆயிரக்கணக்கான ஒப்பந்ததாரர்கள் நீண்ட நேரம் காத்திருந்து டோக்கன்களை வாங்கினர்.
மொத்தம் 300 டோக்கன்கள் மட்டும் கொடுக்கப்பட்டு காலை 11 மணிக்கு டோக்கன் கொடுப்பது நிறுத்தப்பட்டது. மேலும் ஏலத்திற்கு முன்பு ஒரு டி.டிக்கு ரூ.3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை என பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டது. யாரும் அதை எடுக்க ஒத்து வராததால் டி.டி. தொகை கட்டிய அனைவரும் இந்த ஏலத்தில் பங்கேற்றனர்.
18 சதவீத ஜி.எஸ்.டி.
ஏலத்தொகை ரூ.6 லட்சத்து 54 ஆயிரம் என தொடங்கி இறுதியாக ரூ.21 லட்சத்து 40 ஆயிரம் என நிறைவு பெற்றது. இந்த ஏல தொகையுடன் 18 சதவீத ஜி.எஸ்.டி.யும் சேர்த்து கட்ட வேண்டும் எனவும் கூறப்பட்டது.
மேலும் இந்த ஏலத்தில் கலந்து கொண்ட சிலருக்கு பகடி தொகை கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில் நேரடியாக ஏலம் நடத்தப்பட்டதால் ஒரு சிலருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.