தெய்வங்களை வழிபட கட்டுப்பாடு அவசியம் தேவை


தெய்வங்களை வழிபட கட்டுப்பாடு அவசியம் தேவை
x

தெய்வங்களை வழிபட கட்டுப்பாடு அவசியம் தேவை என சூரியனார்கோவில் ஆதீன 28 -வது குரு மகா சன்னிதானம் மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் பேசினார்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்

தஞ்சை பெசன்ட் அரங்கத்தில் தேசிய திருக்கோவில்கள் கூட்டமைப்பு சார்பில் ஆன்மீக கருத்தரங்கம் மற்றும் நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் சோலைமலை தலைமை தாங்கினார். மாநில அமைப்பு செயலாளர் பழனிவேல் வரவேற்றார். இதில் தேசிய தலைவர் சந்திரபோஸ் பெருமாள், தேசிய துணைத் தலைவர் பழனிகுமார் ஆகியோர் பேசினர்.

கூட்டத்தில் சூரியனார்கோவில் ஆதீனம் 28-வது குரு மகா சன்னிதானம் மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், தமிழகத்தில் மட்டும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 36 ஆயிரம் கோவில்களும், சிறிய, கிராம கோவில்கள் என மொத்தம் 6 லட்சத்து 31 ஆயிரம் கோவில்களும் உள்ளன.

கட்டுப்பாடுகள் அவசியம்

கோவில்களின் நிலங்களை, இடங்களை பயன்படுத்துவோர் முறையாக குத்தகையை வழங்கினால் தான் கோவில்களில் பூஜைகள் சிறப்பாக நடக்கும். இந்துக்கள் பெரும்பாலும் கோவில்களுக்கு வழிபட செல்லும் போது, ஏதோ கடமைக்காக செல்கின்றனர். பக்தியை காட்டிலும் தனது செல்வாக்கை பயன்படுத்துவதில் முனைப்பு காட்டுகின்றனர். அப்படி இருக்க கூடாது. தெய்வங்களை வழிபட அதற்கான கட்டுப்பாடுகளை அவசியம் கடைபிடிக்க வேண்டும்.

கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களிடம் கட்டுப்பாடான வழிபாட்டு முறை இருக்கிறது. ஆனால், இந்துக்களிடம் கட்டுப்பாடான வழிபாட்டு முறை இல்லை. நமக்குள் கட்டுப்பாடு இல்லாத காரணத்தினால் பிரிவினைவாதம் வந்துவிட்டது. கோவில்களில் தினமும் பூஜை நடைபெறுவதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார்.

தீர்மானங்கள்

கூட்டத்தில், கிராம கோவில்கள் அனைத்தையும் அந்தந்த கிராம நிர்வாகத்திடமே திரும்ப ஒப்படைக்க வேண்டும். 12 ஆண்டுகளுக்கும் மேலாக குடமுழுக்கு நடத்தப்படாத கோவில்கள் அனைத்திற்கும் உடனடியாக குடமுழுக்கு நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும். இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட அனைத்து கோவில்களிலும் அன்னதானம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாநில செயலாளர் குமரன், மாநில இணைச் செயலாளர் ரமேஷ், வக்கீல் பிரிவு மாநில தலைவர் திருமால், மாநில மகளிரணி தலைவர் ஆனந்திமுரளி, மாநில மகளிரணி செயலாளர் சத்தியலட்சுமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story