மதுரை மாணவருக்கு லட்சத்தீவில் தேர்வு மையம் ஒதுக்கியதால் சர்ச்சை
மதுரை மாணவருக்கு லட்சத்தீவில் தேர்வு மையம் ஒதுக்கியதால் சர்ச்சை
மத்திய அரசு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் கலை, அறிவியல் இளநிலை பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு இந்த வருடம் முதல் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கு கல்வியாளர்கள் தரப்பில் எதிர்ப்பு உள்ளது.
தமிழகத்தில் திருவாரூரில் மத்திய பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்கான பொது நுழைவுத்தேர்வு இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்க உள்ளது. அதில் மதுரை மேலூரை சேர்ந்த மாணவர் ஒருவருக்கு நுழைவுத்தேர்வுக்கான மையம் லட்சத்தீவில் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மதுரை எம்.பி. வெங்கடேசன், மத்திய உயர்கல்வித்துறை செயலாளருக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
திருவாரூர் மத்திய பல்கலைக்கழக, பட்டப்படிப்பில் சேர விண்ணப்பித்த மதுரையை சேர்ந்த மாணவர் ஒருவருக்கு தேர்வு மைய அனுமதி சீட்டு கடந்த 2 நாட்களுக்கு முன்பு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த மாணவருக்கான நுழைவுத்தேர்வு மையம் லட்சத்தீவில் ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஒரு நாள் முன்னதாக தேர்வு மையத்துக்கு செல்ல வேண்டும் என அறிவுரையும் வழங்கப்பட்டுள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்துள்ள மாணவரின் தந்தை என்ன செய்வதென்று தெரியாமல் உள்ளார். இவரைப் போல எத்தனை பேருக்கு இந்த குளறுபடி தகவல் வந்துள்ளது என தெரியவில்லை. இது போன்ற குளறுபடியால் ஏழை, நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் பாதிக்கப்படுவர் என்பதை உணர வேண்டும். எனவே, நுழைவுத்தேர்வு மையத்தை உடனடியாக மாற்றி அந்தந்த பகுதியில் தேர்வு மையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்வில் தேர்ச்சி பெறுவதை விட, தேர்வு மையத்துக்கு செல்வது கடினமாக உள்ள நிலையை மாற்ற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே இதுகுறித்து மத்திய உயர்கல்வித்துறை செயலாளர், திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரிடம் விவரங்கள் கேட்டதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து மேலூரை சேர்ந்த அந்த மாணவருக்கு, மதுரையிலேயே தேர்வு மையம் ஒதுக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து தேசிய தேர்வு முகமையின் ஒருங்கிணைப்பாளர், பல்கலைக்கழக துணைவேந்தருக்கு வெங்கடேசன் எம்.பி. நன்றி தெரிவித்துள்ளார்.