அரசு பஸ் கட்டண வசூல் குறைந்ததால் சென்னையில் வாக்குவாதம்: உதவி மேலாளர், கண்டக்டர் பணி இடைநீக்கம்-மேலாண்மை இயக்குனர் உத்தரவு


அரசு பஸ் கட்டண வசூல் குறைந்ததால் சென்னையில் வாக்குவாதம்: உதவி மேலாளர், கண்டக்டர் பணி இடைநீக்கம்-மேலாண்மை இயக்குனர் உத்தரவு
x

அரசு பஸ் கட்டண வசூல் குறைவு தொடர்பாக சென்னையில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட உதவி மேலாளர், கண்டக்டர் ஆகியோரை பணி இடைநீக்கம் செய்து சேலம் கோட்ட அரசு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் பொன்முடி உத்தரவிட்டுள்ளார்.

சேலம்

வாக்குவாதம்

சேலம் மாவட்டம் மேட்டூரில் இருந்து கடந்த 14-ந் தேதி இரவு அரசு விரைவு பஸ் ஒன்று சென்னைக்கு புறப்பட்டு சென்றது. இந்த பஸ் சேலம் புதிய பஸ் நிலையம் வழியாக சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு மறுநாள் சென்றடைந்தது.

இதையடுத்து பஸ் கண்டக்டர் செல்லதுரை அங்கிருந்த சேலம் கோட்ட உதவி மேலாளர் ஷாஜகானிடம் கையெழுத்து வாங்குவதற்கு சென்றார். அப்போது அவர் கண்டக்டரிடம் பஸ் கட்டண வசூல் ஏன் குறைவாக உள்ளது? என்று கேட்டார்.

இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கண்டக்டர் செல்லத்துரை தனது செல்போனில் வீடியோ எடுத்தார். இதை கவனித்த உதவி மேலாளர் ஷாஜகான் கோபமடைந்து அவரிடம் செல்போனில் படம் எடுக்க வேண்டாம் என்று கூறி அதை தடுக்க சென்றார். பொதுமக்கள் முன்னிலையில் அவர்கள் தகராறில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பணி இடைநீக்கம்

இதற்கிடையில் செல்லதுரை தனது செல்போனில் எடுத்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பரப்பினார். இந்த வீடியோ வைரலாக பரவியது. இதுகுறித்து சேலம் கோட்ட அரசு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் பொன்முடிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் உதவி மேலாளர், கண்டக்டர் ஆகியோரை அழைத்து அவர் விசாரணை நடத்தினார். அதைத்தொடர்ந்து உதவி மேலாளர் ஷாஜகான், கண்டக்டர் செல்லதுரை ஆகியோரை பணி இடைநீக்கம் செய்து மேலாண்மை இயக்குனர் பொன்முடி அதிரடியாக உத்தரவிட்டார்.


Next Story