ஜல்லிக்கட்டு காளையை அடக்கியதால் தகராறு; 2 பேருக்கு அரிவாள் வெட்டு


ஜல்லிக்கட்டு காளையை அடக்கியதால் தகராறு; 2 பேருக்கு அரிவாள் வெட்டு
x

செம்பட்டி விடுதி அருகே ஜல்லிக்கட்டு காளையை அடக்கியதால் ஏற்பட்ட தகராறில் 2 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதையடுத்து, தப்பி ஓடிய வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

புதுக்கோட்டை

தகராறு

புதுக்கோட்டை மாவட்டம் செம்பட்டி விடுதி அருகே உள்ள எம்.தெற்கு தெருவை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். இவருடைய மகன் அரவிந்த் (வயது 25). இவரும், உஞ்சினிப்பட்டியை சேர்ந்த விக்னேஸ்வரனும் (25) நண்பர்கள் ஆவர். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓட்டகுளத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் அரவிந்தின் காளையை விக்னேஸ்வரன் அடக்கியதாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இந்தநிலையில் நேற்று செம்பட்டி விடுதி 4 ரோடு பகுதியில் உள்ள ஓட்டலில் அரவிந்த் சாப்பிட்டுக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த விக்னேஸ்வரன் ஜல்லிக்கட்டில் காளையை அடக்கியது சம்பந்தமாக பேசி தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

அரிவாள் வெட்டு

இதில் ஆத்திரம் அடைந்த விக்னேஸ்வரன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அரவிந்தனை சரமாரியாக வெட்டினார். அப்போது அங்கு சாப்பிட்டுக்கொண்டு இருந்த குருவினான்கோட்டையை சேர்ந்த வெங்கடாசலம் (26) என்பவர் விக்னேஸ்வரனை தடுக்க முயன்றார். இதில் அவருக்கும் தோள்பட்டையில் அரிவாள் வெட்டு விழுந்தது. பின்னர் விக்னேஸ்வரன் அங்கிருந்து தப்பி ஓடினார்.

இதையடுத்து ரத்த வெள்ளத்தில் மிதந்த அரவிந்த் மற்றும் வெங்கடாசலம் ஆகியோரை அப்பகுதி மக்கள் மீட்டு ஆலங்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த செம்பட்டி விடுதி சப்-இன்ஸ்பெக்டர் சமுத்திரராஜன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய விக்னேஸ்வரனை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story