மாடுகளை பொது ஏலம் விடுவதில் தகராறு: நெல்லை மாவட்ட பா.ஜனதா தலைவர் கைது


மாடுகளை பொது ஏலம் விடுவதில் தகராறு: நெல்லை மாவட்ட பா.ஜனதா தலைவர் கைது
x

மாடுகளை பொது ஏலம் விடுவதில் ஏற்பட்ட தகராறு காரணமாக நெல்லை மாவட்ட பா.ஜனதா தலைவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை,

நெல்லை மாநகர பகுதியில் சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிவதால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். இதனை தடுக்க சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து பொது ஏலம் விட மாநகராட்சி சார்பில் உத்தரவிடப்பட்டது.

அதன்படி முதல்நாளில் மாநகராட்சி சார்பில் 15 மாடுகள் பிடிக்கப்பட்டு ஏலம் விடப்பட்டது.அதேபோல் நேற்றுமுன்தினம் 2-வது நாளாக மாடுகள் பிடிக்கப்பட்டு ஏலம் விடப்போவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு மாடுகளின் உரிமையாளர்கள் ஒன்று திரண்டு எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களிடம் மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

போராட்டம்

இதற்கிடையே பாளையங்கோட்டை பகுதியில் பிடிக்கப்பட்ட 11 மாடுகளை ஏலம் விடுவதற்காக அங்குள்ள குடிநீர் தொட்டி அருகே அதிகாரிகள் அடைத்து வைத்தனர். இதனை அறிந்த நெல்லை மாவட்ட பா.ஜனதா தலைவர் தயாசங்கர், பொதுச்செயலாளர் சுரேஷ் உள்ளிட்டவர்கள் அங்கு சென்றனர். அவர்கள் திடீரென்று அரசு அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு போராட்டம் நடத்தினர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் தயாசங்கர், சுரேஷ் உள்ளிட்ட சிலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

3 பேர் கைது

இந்த நிலையில் நேற்று காலையில் போலீசார், பா.ஜனதா மாவட்ட தலைவர் தயாசங்கர், சுரேஷ், கிழக்கு மாவட்ட அமைப்பு சாரா பிரிவு தலைவர் சங்கரசுப்பிரமணியன் ஆகியோரை திடீரென்று கைது செய்து என்.ஜி.ஓ. காலனியில் உள்ள ஒரு மண்டபத்தில் அடைத்தனர். இதனை அறிந்த பா.ஜனதாவினர் அந்த மண்டபத்தின் முன்பு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் கைதான 3 பேரையும் போலீசார், பாளையங்கோட்டையில் உள்ள நீதிபதி அருண்குமார் வீட்டில் ஆஜர்படுத்தினர். அவர்கள் 3 பேரையும் வருகிற 2-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story