அணையில் குளித்தபோது தகராறு:அரிவாளால் வெட்டி வியாபாரி படுகொலை:தேவதானப்பட்டி அருகே பயங்கரம்
தேவதானப்பட்டி அருகே அணையில் குளித்தபோது ஏற்பட்ட தகராறில் அரிவாளால் வெட்டி வியாபாரி படுகொலை செய்யப்பட்டார்.
அணையில் குளியல்
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே உள்ள கெங்குவார்பட்டியை சேர்ந்தவர் ஜெகதீஸ்வரன் (வயது 27). இறைச்சி விற்பனை கடை வைத்து நடத்தி வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் வினோத் குமார் (32). நண்பர்களான இவர்கள் இருவரும் நேற்று மாலை கெங்குவார்பட்டி மந்தை பகுதியில் உள்ள ஓட்டணைக்கு குளிக்க சென்றனர். அங்கு அவர்கள் அணையில் ஆனந்தமாய் குளித்து கொண்டிருந்தனர்.
அப்போது ஜி.கல்லுப்பட்டியை சேர்ந்த ரிஷாத்ராஜ் (22) மற்றும் அவரது நண்பர்கள் 10 பேரும் அணையில் குளிக்க வந்தனர். குளித்து கொண்டிருந்தபோது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது. தகராறு முற்றிய நிலையில் ரிஷாத்ராஜ் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து ெஜகதீஸ்வரன், வினோத்குமார் ஆகிய இருவரையும் சரமாரியாக தாக்கினர்.
வெட்டிக்கொலை
ஆனாலும் ஆத்்திரம் அடங்காத ரிஷாத் ராஜ் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் 2 பேரையும் சரமாரியாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் ஜெகதீஸ்வரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதையடுத்து ரிஷாத்ராஜ் தனது நண்பர்களுடன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதற்கிடையே தகவல் அறிந்த தேவதானப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
பின்னர் படுகாயமடைந்த வினோத்குமாரை மீட்டு சிகிச்சைக்காக பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஜெகதீஸ்வரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரேவும் அங்கு வந்து சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர். அணையில் குளித்தபோது ஏற்பட்ட தகராறில் வியாபாரி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.