திட்டக்குடி அரசு கல்லூரியில் 415 மாணவ, மாணவிகளுக்கு பட்டம் அமைச்சர் க.பொன்முடி வழங்கினார்


திட்டக்குடி  அரசு கல்லூரியில் 415 மாணவ, மாணவிகளுக்கு பட்டம்  அமைச்சர் க.பொன்முடி வழங்கினார்
x

திட்டக்குடி அரசு கல்லூரியில் 415 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை அமைச்சர் க.பொன்முடி வழங்கினார்.

கடலூர்


ராமநத்தம்,

திட்டக்குடியில் உள்ள அரசு திருவள்ளூர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரி முதல்வர் முத்துசாமி தலைமை தாங்கினார்.

விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன், உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். தொடர்ந்து, 415 மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர் க.பொன்முடி பட்டங்களை வழங்கி பேசியதாவது:-

தற்போது தமிழகத்தில் நடைபெறுகின்ற ஆட்சி பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கின்ற ஆட்சியாக திகழ்கிறது. அதை மெய்ப்பிக்கின்ற வகையில் இங்கு ஆண்களைக் காட்டிலும் பெண்களே பெரும்பான்மையாக பட்டங்களை பெற்றுள்ளனர். இது தான் திராவிட மாடல் ஆட்சி. தற்போது பட்டம் முடித்தவர்களுக்கு அரசு வழங்கும் ஊக்கத் தொகை கிடைக்கும் வாய்ப்பு குறைவு. அதேநேரத்தில் தற்போது இளங்கலையில் இணைந்துள்ள மாணவர்களுக்கு அத்தகைய வாய்ப்பை பெற்றுள்ளனர்.

மாணவ, மாணவியர் மகிழ்ச்சியாக இருக்க கூடிய காலம் இது தான். இந்த நிலையில், கலை அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வை கட்டாயப்படுத்துகின்றது மத்திய அரசு. இதனால் கிராமப்புற மாணவர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாவர். எனவே தமிழகத்துக்கு இது தேவையற்றது.

மாணவர்கள் வேலைவாய்ப்பு பெறுவதற்காக மட்டுமே படிக்கக் கூடாது வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையிலும் தங்களது திறனை மேம்படுத்திக் கொள்ளவேண்டும். அதற்காகத் தான் தமிழக முதல்வர் நான் முதல்வன் திட்டத்தை அறிமுகப் படுத்தியுள்ளார். ஆட்சிக்கு வந்த ஒரே ஆண்டில் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம் என்றார்.

விழாவில் கல்லூரி கல்வி இணை இயக்குனர் எஸ்.காவேரியம்மாள், திருவள்ளுவர் பல்கலைக் கழக பதிவாளர் ஆர்.விஜயராகவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story