பட்டமளிப்பு விழா
தேசிய கல்வி கொள்கை வேலைவாய்ப்பை பெறுவதற்கு மாணவர்களை உருவாக்குகிறது என சாஸ்த்ரா நிகர்நிலைப்பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மத்தியமந்திரி தர்மேந்திர பிரதான் பேசினார்.
தஞ்சையை அடுத்த சாஸ்த்ரா நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் 36-வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. விழாவிற்கு பல்கலைக்கழக வேந்தர் ஆர்.சேதுராமன் தலைமை தாங்கினார். மத்திய மீன் வளத்துறை இணை மந்திரி எல்.முருகன், பல்கலைக் கழக முதன்மையர் (திட்டம் மற்றும் மேம்பாடு) எஸ்.சுவாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பல்கலைக்கழகத் துணைவேந்தர் எஸ்.வைத்திய சுப்பிரமணியம் வரவேற்றார். விழாவில் மத்திய கல்வித்துறை, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோரியல் துறை மந்திரி தர்மேந்திர பிரதான் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தேசிய கல்வி கொள்கை
தேசிய கல்வி கொள்கை வேலைவாய்ப்புகளை பெறுவதற்கு மாணவர்களை உருவாக்குகிறது. அனைத்து கல்வி முறைகளும் பட்டதாரிகளை உருவாக்குகிறது. நாம் எந்த மொழியையும் வெறுக்கக்கூடாது. ஆங்கிலத்தை தெரிந்து கொள்வது தவறு இல்லை. இதேபோல, பிற மொழிகளை கற்று கொள்வதும் தவறு கிடையாது. ஆனால், நமது தாய்மொழியை அறிந்து கொள்வது மிகவும் முக்கியமானது. எனவே, மத்திய அரசு அனைத்து மொழிகளையும் தேசிய மொழிகளாக அங்கீகரிக்கிறது.
தாய்மொழிக்கு முக்கியத்துவம்
இதை தேசிய கல்வி கொள்கையும் நிரூபிக்கிறது. புதிய கல்வி கொள்கையில் அனைத்து முறைகளும் உள்ளூர் மொழியை அடிப்படையாக கொண்டது. குறிப்பாக, தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. தொழில் நுட்பத்தில் இந்தியா மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் தகவல் தொழில்நுட்பத்தில் தற்சார்பு நிலையை எட்டும். இதேபோல, 2023-ம் ஆண்டுக்குள் நம் நாட்டிலுள்ள 6 லட்சம் கிராமங்களும் கண்ணாடி நாரிழை இணையவழியால் இணைக்கப்பட உள்ளது. டிஜிட்டல் பண பரிவர்த்தனை உலக அளவில் நடைமுறைக்கு வந்துள்ளது. இதில், 40 சதவீதம் இந்தியாவில் பின்பற்றப்படுகிறது. இந்த திட்டத்தில் உலக அளவில் இந்தியா முன்னிலை வகிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர், புளோரிடா பல்கலைக்கழகக் கணிதப் பேராசிரியர் கிருஷ்ணசாமி அல்லாடி, பாரதீய பாஷா சமிதி தலைவர் சாமு கிருஷ்ண சாஸ்திரி ஆகியோருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. மேலும், 72 முனைவர் பட்டதாரிகள் உள்பட 4,100 மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது.