போதிய வருமானம் இன்றி தவிக்கும் சமையல் கியாஸ் சிலிண்டர் தொழிலாளர்கள்
ஓடி... ஓடி... உழைத்தும் போதிய வருமானம் இன்றி தவிக்கும் சமையல் கியாஸ் சிலிண்டர் தொழிலாளர்கள்
இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலான வீடுகளில் சமையலுக்கு கியாஸ் சிலிண்டர்களே பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன. சில வீடுகளில் மட்டுமே விறகு, மண்எண்ணெய் மூலம் சமைக்கும் முறை இன்றும் காணப்படுகிறது. நகர்புறங்களில் வசிக்கும் பெரும்பாலானோரின் வீட்டிலும் சமையல் பயன்பாட்டில் கியாஸ் சிலிண்டர் முக்கிய பங்கு வகிக்கிறது. திடீரென கியாஸ் தீர்ந்து விட்டது என்றால் மறு சிலிண்டர் வரும்வரை இல்லத்தரசிகளின் பாடு திண்டாட்டம் தான். அம்மா கியாஸ் வந்துள்ளது என்ற குரல் கேட்டதும் மகிழ்ச்சியுடன் இதோ வருகிறேன் என்று ஓடோடி செல்வார்கள்.
இப்படி மாதம் ஒருமுறை பெரும்பாலான வீடுகளில் ஒலிக்கும் குரலுக்கு சொந்தக்காரர்களான சமையல் கியாஸ் சிலிண்டர் வினியோகிக்கும் தொழிலாளர்களும் நம்மைபோன்று சாதாரண மனிதர்களே. நம்மோடு நேரடி தொடர்பில் இருக்கும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் என்ன?, சமையல் கியாஸ் வினியோகம் செய்யும்போது அவர்களுக்கும், இல்லத்தரசிகள், குடியிருப்புவாசிகளுக்கும் ஏற்படும் சிக்கல்கள் என்ன? என்பதை பார்க்கலாம்.
வருமானம் குறைவு
கியாஸ் சிலிண்டர் வினியோக தொழிலாளர் ஜான்சன் (பிரம்மபுரம்) :- சிலிண்டர் வினியோகம் செய்யும் தொழிலாளர்களுக்கு மாத சம்பளம் குறைவாக வழங்கப்படுகிறது. இதனை அதிகரிக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குறைவான வருமானத்தை கொண்டு குடும்பத்தை நடத்தி பிள்ளைகளை படிக்க வைக்க மிகவும் சிரமமாக உள்ளது. எனவே கியாஸ் நிறுவனங்கள் கூடுதலாக சம்பளம் வழங்க முன்வர வேண்டும். மேலும் சம்பளத்தை வங்கிக்கணக்கில் செலுத்த வேண்டும். அதன்மூலம் வங்கியில் பிள்ளைகளின் படிப்பிற்கு கல்விக்கடன், அவசர தேவைக்காக பிற கடன்கள் பெற வசதியாக இருக்கும். சில ஆண்டுகள் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு பி.எப்., இ.எஸ்.ஐ. வசதி ஏஜென்சி நிறுவனம் செய்து கொடுத்துள்ளது. சிலிண்டர் வினியோகம் செய்யும் இடத்தில் பெரும்பாலானோர் கனிவுடன் தான் நடத்துகிறார்கள்.
பள்ளிக்கூட ஆசிரியை ராஜேஸ்வரி (சைதாப்பேட்டை):- சமையல் கியாஸ் விலை முன்பைவிட தற்போது கடுமையாக உயர்ந்து விட்டது. கியாஸ் ஏஜென்சி நிறுவனம் 15 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு சிலிண்டர்களை இலவசமாக வினியோகம் செய்ய வேண்டும். சிலிண்டர் வினியோகம் செய்யும் தொழிலாளர்கள் கடும் வெயிலிலும் சைக்கிளில் கொண்டு வந்து கியாஸ் சிலிண்டர் வினியோகம் செய்கிறார்கள். அதற்கு அவர்களுக்கு மாதம் ஒருமுறை டிப்ஸ் கொடுப்பதில் எவ்வித தப்பும் கிடையாது. ஆனால் இவ்வளவு தர வேண்டும் என்று அடாவடியாக, கறாராக டிப்ஸ் கேட்டு பெறக் கூடாது. கியாஸ் நிறுவனங்கள் அவர்களுக்கு உரிய சம்பளம் கொடுத்தால் அவர்கள் டிப்ஸ் வாங்குவதை தவிர்க்க வாய்ப்புள்ளது. கியாஸ் சிலிண்டர் விலையை குறைத்தால் ஏழை, நடுத்தர குடும்பங்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.
குடும்ப தலைவி கற்பகம் (காங்கேயநல்லூர்) :- சிலிண்டர் விலை மாதந்தோறும் அதிகரித்து கொண்டே செல்கிறது. ஆனால் அதற்குரிய மானியத்தை வங்கிக்கணக்கில் சரியாக செலுத்துவதில்லை. இல்லையென்றால் குறைவான மானியம் வழங்கப்படுகிறது. சிலிண்டர் விலை உயர்வு போன்று தற்போது டிப்ஸ் கேட்பதும் அதிகரித்துள்ளது. இவ்வளவு வேண்டும் என்று டிப்ஸ் கேட்பதன் காரணமாக தொழிலாளர்கள்- வாடிக்கையாளர்கள் இடையே சுமூக உறவு இல்லாமல் உள்ளது. இதனை நீக்க அவர்களுக்கு உரிய வசதிகளை சம்பந்தப்பட்ட கியாஸ் நிறுவனம், ஏஜென்சிகள் செய்து கொடுக்க வேண்டும்.
கணேஷ்(வீடுகளுக்கு சிலிண்டர் போடும் பணியாளர்):-
கியாஸ் குடோனில் இருந்து நாங்கள் சிலிண்டரை எங்கள் சொந்த செலவில் தான் எடுத்து வந்து வீடுகளுக்கு வினியோகம் செய்கிறோம். கம்பெனியில் எங்களுக்கு தனியாக சம்பளம் ஏதும் தருவதில்லை. சிலிண்டர் போடும் இடங்களில் பணம் வசூலிக்க கூடாது என வினியோகஸ்தர்கள் கூறுகிறார்கள். நாங்கள் இதனை நம்பி மட்டுமே குடும்பம் நடத்தி வருகிறோம். சிலிண்டர் வினியோகம் செய்யும் பணியாளர்கள் சங்கம் என மற்ற மாவட்டங்களில் உள்ளது. ஆனால் திருப்பத்தூர் மாவட்டத்தில் இதுவரை இன்னும் ஏற்படுத்தப்படவில்லை. சிலிண்டரை எடுத்து வந்து மாடி வீடுகளுக்கும் தூக்கி சென்று வழங்குகிறோம். ஆனால் அதற்காக எந்த பணமும் தருவதில்லை. பல நேரங்களில் வாடிக்கையாளர்கள் உடனடியாக சிலிண்டர் வேண்டும் என கூறுகிறார்கள். ஆனால் பதிவு செய்தவர்களுக்கு தான் முன்னுரிமையின் அடிப்படையில் வழங்குகிறோம். இதனால் பொதுமக்கள் எங்களை திட்டுகிறார்கள். சிலிண்டர் போடும் பணியாளர்களுக்கு கியாஸ் சிலிண்டர் கம்பெனி தனியாக சம்பளத்தை ஏற்படுத்தி தர வேண்டும்.
குடும்பத் தலைவி ராணி(அரக்கோணம்):-
ஆன்லைன் மூலம் சிலிண்டருக்கான பில் செலுத்துவதால் நாம் கொடுப்பதை வாங்கி கொள்கிறார்கள். சில நேரங்களில் கூடுதலாக கேட்பார்கள். ஏன் என்று கேட்டால், உங்களுக்கு மட்டும் தான் இந்த பகுதிக்கு வந்திருக்கிறேன். அதனால் மோட்டார் சைக்கிள் பெட்ரோல் செலவிற்காவது வேண்டும் என்று சொல்லும் போது கொடுக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே, டெலிவரிக்கான வாகன வசதியை முறையாக ஏஜென்சி நிறுவனங்கள் ஏற்படுத்தி கொடுத்தாலே இந்த கூடுதல் கட்டண சுமை நடுத்தர குடும்பத்தினருக்கு குறையும்.
சிலிண்டர் டெலிவரி செய்யும் திருவண்ணாமலையை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி:-
நான் திருவண்ணாமலை நகரில் கியாஸ் சிலிண்டர் வீடுகளுக்கு வினியோகம் செய்து வருகிறேன். கியாஸ் சிலிண்டர் கொண்டு செல்லும்போது சில நேரங்களில் வீடு பூட்டி இருக்கும். இதனால் நாங்கள் திரும்பிச் செல்ல வேண்டிய நிலை இருக்கும். ஆனால் தற்போது வாடிக்கையாளர்கள் அனைவரும் புக்கிங் செய்தவுடன் தாங்கள் வீட்டில் இருக்கும் நேரத்தை குறிப்பிட்டு சொல்வார்கள். அந்த நேரத்தில் சிலிண்டரைக் கொண்டு செல்வோம். எனவே நாங்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்செல்ல வேண்டிய நிலை இல்லை.
வாடிக்கையாளர்கள் பலர் நட்புடன் பழகுவார்கள். சிலிண்டர் வினியோகம் செய்யும்போது சாப்பிட்டு விட்டு செல்லுங்கள். தண்ணீர் குடித்து விட்டு செல்லுங்கள் என்று அன்பாக கூறுவார்கள். எனினும் நாங்கள் அதை மறுத்து விட்டு எங்கள் பணியை மேற்கொள்வோம். வாடிக்கையாளர்களில் சிலர் அன்போடு டிப்ஸ் கொடுப்பார்கள். நாங்கள் யாரிடமும் டிப்ஸ் தருமாறு வற்புறுத்தி கேட்பதில்லை.
திருவண்ணாமலையை சேர்ந்த குடும்பத் தலைவி கனிமொழி:-
சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்த நிலையில் கியாஸ் சிலிண்டர் வினியோகம் செய்ய வரும் தொழிலாளர்கள் கூடுதலாக வண்டி வாடகைக்கு என ரூ.50 பெறுகின்றனர். வேறு வழியின்றி பொதுமக்களும் கொடுக்கும் நிலை உள்ளது.
இதனால் அடித்தட்டு மக்கள் பாதிப்படைகின்றனர். சிலர் கட்டாயமாக தொகையை வசூலித்து செல்கின்றனர். ஏஜென்சிகள் அவர்களுக்கு இந்தத் தொகையை வழங்க வேண்டும். ஆனால் அவர்கள் தொழிலாளர்களுக்கு வழங்காமல் வாடிக்கையாளர்களிடம் பெற்றுக் கொள்ளுமாறு தெரிவிக்கின்றனர். இதனால் தொழிலாளர்கள் வாடிக்கையாளர்களிடம் பணம் பெறும் சூழ்நிலை உள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெயர் வெளியிட விரும்பாத சிலிண்டர் வினியோகம் செய்யும் திருப்பத்தூர் தொழிலாளி:-
எங்களுக்கு குறைவான சம்பளமே தரப்படுகிறது. பணி பாதுகாப்பு கிடையாது. வாடிக்கையாளர்கள் விரும்பி தருகின்ற டிப்ஸ் தொகையின் மூலமே எங்களுடைய அன்றாட வாழ்க்கையை நடத்தி வருகிறோம். எங்களுக்கும் மற்ற தொழிலாளர்களுக்கு வழங்குவது போல் பி.எப், கிராஜுட்டி, இ.எஸ்.ஐ. இன்சூரன்ஸ், மெடிக்கல் அலவன்ஸ் உள்ளிட்டவை வழங்க அரசு ஆவன செய்ய வேண்டும்.
கியாஸ் ஏஜென்சி உரிமையாளர் ஒருவர் கூறியதாவது:-
இத்தொழிலில் நாங்கள் பல வருடங்களாக செயல்பட்டு மக்களுக்கு சிறப்பான சேவை செய்து வருகிறோம். தற்போது சிலிண்டர் சப்ளை செய்வதற்கு போதுமான பணியாளர்கள் கிடைப்பது இல்லை. இதனால் மக்களுக்கு உடனுக்குடன் சிலிண்டர் சப்பளை செய்வதில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளது. சிலிண்டர் சப்ளை செய்வதற்கு வீட்டில் யாரிடமும் பணம் வாங்க கூடாது என்று எங்கள் பணியாளர்களுக்கு கூறியுள்ளோம். அவர்கள் கொடுத்தால் வாங்கிக் கொள்கின்றனர். நாங்கள் யாரையும் கட்டாயப்படுத்துவது கிடையாது என கூறினார்.