குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து ஓராண்டு நினைவலைகள்
கடந்த ஆண்டு டிசம்பர் 8-ந் தேதி நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நஞ்சப்பசத்திரம் கிராமத்தில் ராணுவ ஹெலிகாப்டர் பயங்கர விபத்துக்குள்ளானது. இதில் நாட்டின் முதல் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 14 உயிரிழந்தனர். விபத்து நடந்து இன்றுடன் ஓராண்டாகிறது. நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தின் நினைவலைகள் நீங்காமல் உள்ளது.
ஊட்டி,
கடந்த ஆண்டு டிசம்பர் 8-ந் தேதி நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நஞ்சப்பசத்திரம் கிராமத்தில் ராணுவ ஹெலிகாப்டர் பயங்கர விபத்துக்குள்ளானது. இதில் நாட்டின் முதல் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 14 உயிரிழந்தனர். விபத்து நடந்து இன்றுடன் ஓராண்டாகிறது. நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தின் நினைவலைகள் நீங்காமல் உள்ளது.
ஹெலிகாப்டர் விபத்து
நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டனில் முப்படை அதிகாரிகள் பயிற்சி கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 8-ந் தேதி நடக்க இருந்த ராணுவ அதிகாரிகளுடனான கலந்துரையாடலில் பங்கேற்பதற்காக முப்படைகளின் தலைமை தளபதியாக இருந்த பிபின் ராவத் டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை சூலூர் விமானப்படை தளத்திற்கு வந்தார். சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்திற்கு எம்.ஐ.ரக ஹெலிகாப்டரில் குன்னூரை நோக்கி பயணித்து கொண்டிருந்தார்.
பிபின் ராவத்துடன், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் ராணுவ உயர் அதிகாரிகள் என மொத்தம் 14 பேர் அந்த விமானத்தில் பயணித்தனர். குன்னூருக்கு மிக அருகில் தரையிறங்குவதற்கு 10 நிமிடம் இருக்கும் நிலையில் நஞ்சப்பசத்திரம் என்னும் இடத்தில், வானில் பறந்து கொண்டிருந்த ஹெலிகாப்டர் திடீரென விபத்துக்குள்ளானது. இந்த சத்தம் கிராம மக்களை குலை நடுங்க செய்தது. இதில் ஹெலிகாப்டர் முழுவதும் சுக்கு நூறாகிவிட்டது.
14 பேர் உயிரிழந்தனர்
இந்த கோர விபத்தில் பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத், பிரிகேடியர் எல்.எஸ்.லிட்டர், லெப்டினன்ட் கர்னல் ஹர்ஜிந்தர் சிங், நாயக் குருசேவக் சிங், நாயக் ஜிதேந்திர குமார், லான்ஸ் நாயக் சாய் தேஜா, லான்ஸ் நாயக் விவேக் குமார், ஹவில்தார் சத்பால் ராய், விங் கமாண்டர் பிரித்வி சிங் சவுகான், ஸ்குட்ரான் லீடர் குல்தீப் சிங், ஜூனியர் வாரன்ட் ஆபீஸர் ராணா பிரதாப் தாஸ், ஜூனியர் வாரன்ட் ஆபீஸர் பிரதீப் உள்பட 13 பேர் உயிரிழந்தனர்.
படுகாயங்களுடன் மீட்கப்பட்ட குரூப் கேப்டன் வருண் சிங் பெங்களூரு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். ஹெலிகாப்டரில் பயணித்த ஒருவர் கூட இதில் தப்பவில்லை. இந்த விபத்து சதி செயலாக இருக்குமா என்று அந்த நேரத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. ஏனென்றால் அந்த காலகட்டத்தில் தான் நீண்ட கால இடைவெளிக்கு பின்னர் இந்தியாவுக்கு முதல் முறையாக முப்படை தளபதி பதவி ஏற்படுத்தப்பட்டது. இந்த விபத்து சம்பவத்தை உலகின் அனைத்து நாடுகளும் உன்னிப்பாக உற்று நோக்கின.
மீட்பு பணியில் பொதுமக்கள்
அப்போது குன்னூர் ஹெலிகாப்டர் விபத்துக்கு மோசமான வானிலையே காரணம். எதிர்பாராத விதமாக ஏற்பட்ட திடீர் மேகமூட்டத்துக்குள் ஹெலிகாப்டர் நுழைந்ததால் விபத்துக்குள்ளானது என தெரிவிக்கப்பட்டது. இந்த விபத்து நிகழ்ந்ததை பார்த்ததும் நஞ்சப்பசத்திரம் கிராம மக்கள், தங்களது உயிரை பணயம் வைத்து விபத்தில் சிக்கியவர்களை மீட்க முயற்சி செய்தனர். ஹெலிகாப்டரில் பற்றி எரிந்த தீயை தண்ணீரை ஊற்றி அணைத்தனர்.
போலீசாரும், ராணுவமும் வந்த பின்னரும் கூட அவர்களுடன் இணைந்து மீட்பு பணி முடியும் வரை எல்லா விதமான உதவிகளையும் கிராம மக்கள் செய்து கொடுத்தனர். ஆனாலும், ஒரு உயிரை கூட காப்பாற்ற முடியாமல் போனது அந்த கிராம மக்கள் மனதில் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தி விட்டது.
இதற்கிடையே கிராம மக்களின் உதவிக்கு பிரதிபலனாக ராணுவம் சார்பில் பல்வேறு மருத்துவ முகாம்கள் நடத்தி, அவர்களுக்கு இலவசமாக மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது. மேலும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டது. தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேரில் வந்து நன்றி தெரிவித்திருந்தார்.
நினைவு தினம்
இந்தநிலையில் இன்றுடன் (வியாழக்கிழமை) ஹெலிகாப்டர் விபத்து நடந்து ஓராண்டு ஆகிவிட்டது. இதையொட்டி வெலிங்டன் ராணுவ கல்லூரி சார்பில், விபத்து நடந்த இடத்தில் நினைவு நாள் நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதில் வெலிங்டன் ராணுவ கல்லூரி கமாண்டண்ட் லெப்டினன்ட் ஜெனரல் வீரேந்திர வாட்ஸ் கலந்துகொள்கிறார்.
இதேபோல் எம்.ஆர்.சி. ராணுவ கமாண்டண்ட் எஸ்.கே.யாதவ் மற்றும் மாவட்ட கலெக்டர் அம்ரித், போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள். அப்பகுதி மக்கள் சார்பில் அஞ்சலி செலுத்தப்படுகிறது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
ராணுவ ஹெலிகாப்டர் விபத்து இன்னும் மக்களின் மனதில் நீங்காமல் உள்ளது. எங்கள் உறவினரில் ஒருவர் இறந்து இருந்தால் கூட இவ்வளவு காலம் நினைவில் இருப்பாரா என்று தெரியாது. ஆனால், முப்படை தலைமை தளபதி இறந்த சம்பவம் எங்களை நிலை குலைய செய்து விட்டது.
அந்த இக்கட்டான நேரத்திலும் தண்ணீர் கொண்டு தீயை அணைத்தது, போர்வைகளை கொண்டு சென்றது என தங்களால் இயன்ற உதவிகளை செய்தோம். ஆனாலும், ஒரு உயிரை கூட காப்பாற்ற முடியாதது எங்களுக்கு பெரும் ஏமாற்றமாக உள்ளது. உயிரிழந்த முப்படை தளபதியின் தியாகத்தை போற்றும் வகையில் காட்டேரி பூங்காவிற்கு பிபின் ராவத் பெயரை சூட்ட வேண்டும் என்றனர்.