அரிசி ஆலைகளில் ரேஷன் அரிசி பதுக்கலா
தஞ்சை, வல்லம் பகுதிகளில் உள்ள அரிசி ஆலைகளில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
தஞ்சாவூர்;
தஞ்சை, வல்லம் பகுதிகளில் உள்ள அரிசி ஆலைகளில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
ரேசன் அரிசி பதுக்கலா?
தஞ்சை மாவட்டத்தில் தற்போது குறுவை நெல் கொள்முதல் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் வெளி மாவட்டங்களில் இருந்து நெல் விற்பனைக்காக தஞ்சை மாவட்ட கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வருவதை தடுக்கவும், ரேஷன்அரிசி பதுக்கல், விற்பனையை தடுக்கவும் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசாருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
அதன்பேரில் திருச்சி போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா உத்தரவின் பேரில் தஞ்சை துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் முருகானந்தம், சப்-இன்ஸ்பெக்டர் விஜய் மற்றும் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி கடந்த சில நாட்களாக கொள்முதல் நிலையங்களில் சோதனை நடத்தினர்.
அரிசி ஆலைகள்
இந்த நிலையில் நேற்று தஞ்சை மற்றும் வல்லம் பகுதிகளில் உள்ள பல்வேறு அரிசி ஆலைகளில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையின் போது ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? முறைகேடாக பயன்படுத்தப்படுகிறா? என சோதனை மேற்கொள்ளப்பட்டது.
5 அரிசி ஆலைகளில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதே போன்று சோதனை தொடர்ந்து நடத்தப்படும். அப்போது முறைகேடு கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.