கோர்ட்டில் புகார் அளிக்க வந்த பெண்ணை தடுத்து நிறுத்திய போலீசார்
கும்பகோணத்தில், கோர்ட்டில் புகார் அளிக்க வந்த பெண்ணை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது ரகளையில் ஈடுபட்ட பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கும்பகோணம்;
கும்பகோணத்தில், கோர்ட்டில் புகார் அளிக்க வந்த பெண்ணை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது ரகளையில் ஈடுபட்ட பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெளிநாட்டில் வேலை
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாதுளம்பேட்டை சீதளாமாரியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் தங்கையன். இவரது மகள் செந்தாமரை(வயது 41). இவர், வெளிநாட்டில் டிரைவராக வேலைபார்த்து வந்துள்ளார்.வெளிநாட்டில் தான் சம்பாதித்த பணத்தை தெரிந்தவர்கள் சிலர் மூலம் தனது சொந்த ஊரில் உள்ள உறவினர்கள் சிலரிடம் கொடுத்து சேர்த்து வைக்க சொல்லியுள்ளார். மேலும் செந்தாமரைக்கு நத்தம் கிராமத்தில் சொந்த வீடும் இருந்துள்ளது.
வீட்டை அபகரித்தனர்
இந்த நிலையில் வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பிய செந்தாமரை தனது உறவினர்களிடம் தான் வெளிநாட்டில் இருந்து கொடுத்து அனுப்பிய பணத்தையும், தனக்கு சொந்தமான வீட்டையும் திரும்ப தருமாறு கேட்டுள்ளார். ஆனால் அவரது உறவினர்கள் செந்தாமரைக்கு சொந்தமான வீட்டை அபகரித்துக்கொண்டதுடன், வெளிநாட்டில் இருந்து அவர் கொடுத்து அனுப்பிய பணத்தையும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.
கோர்ட்டுக்கு வந்த பெண்
இதனால் அதிர்ச்சி அடைந்த செந்தாமரை தனது வீட்டையும், பணத்தையும் மீட்டுத்தரக்கோரி கும்பகோணம் மேற்கு மற்றும் தாலுகா போலீசில் கடந்த சில தினங்களுக்கு முன்பு புகார் கொடுத்துள்ளார். மேலும் இதுதொடர்பாக தமிழக முதல்-அமைச்சரின் தனிப்பிரிவுக்கும் புகார் மனு அனுப்பியுள்ளார்.தனது புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காததால் விரக்தியடைந்த செந்தாமரை தனது பிரச்சினை குறித்து நேரடியாக கோர்ட்டில் தெரிவிக்கும் நோக்கத்துடன் நேற்று காலை கும்பகோணம் கோர்ட்டுக்கு வந்துள்ளார்.
போலீசாருடன் ரகளை
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், மோட்டார் சைக்கிளில் கோர்ட்டுக்கு வந்த செந்தாமரையை மறித்துள்ளனர். இதனால் ஆவேசம் அடைந்த செந்தாமரை சாலையின் நடுவில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் போலீசாரை கீழே தள்ளி விட்டு ரகளையில் ஈடுபட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார், கும்பகோணம் மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதற்கிடையில் சோழபுரம் போலீஸ் நிலையத்தில் இருந்து கும்பகோணம் கோர்ட்டுக்கு வழக்கு பணிக்காக வந்த மகளிர் போலீசார், செந்தாமரையை சமாதானம் செய்து சாலையை விட்டு ஓரமாக வரக்கூறி அழைத்தனர்.ஆனால் செந்தாமரை அந்த மகளிர் போலீசாரை பிடித்து கீழே தள்ளி விட்டதுடன் போலீசாரை தகாத வார்த்தைகளால் திட்டி விட்டு கோர்ட்டுக்குள் செல்ல முயன்றார். இந்த சம்பவத்தில் சோழபுரம் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வரும் பெண் போலீஸ் சுமதிக்கு கையில் காயம் ஏற்பட்டது. உடனே அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
கைது
இதுகுறித்து தகவலறிந்த கும்பகோணம் கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அங்கு ரகளையில் ஈடுபட்ட செந்தாமரையை பிடித்து அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.அங்கு அவரிடம் விசாரணை நடத்திய போலீசார், செந்தாமரையை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.