போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மனைவி கைது
நாகை பெண்ணிடம் வீட்டை ஒத்திக்கு எடுத்து பணம் கொடுக்காமல் ஏமாற்றிய தஞ்சை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மனைவியை போலீசார் கைது செய்தனர். மற்றொருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தஞ்சாவூர்;
நாகை பெண்ணிடம் வீட்டை ஒத்திக்கு எடுத்து பணம் கொடுக்காமல் ஏமாற்றிய தஞ்சை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மனைவியை போலீசார் கைது செய்தனர். மற்றொருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
குத்தகைக்கு வீடு
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா வடக்குமட விளாகம் பகுதியை சேர்ந்தவர் இளங்கோ. ஓய்வு பெற்ற ராணுவ வீரரான இவருடைய மனைவி சரஸ்வதி, தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-என்னிடம், தஞ்சை சிந்தாமணி குடியிருப்பை சேர்ந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜம்புலிங்கத்தின் மனைவி ராதிகா மற்றும் மற்றொரு நபர் ஆகியோர் சேர்ந்து சிந்தாமணி குடியிருப்பில் உள்ள வீட்டை குறிப்பிட்ட தொகைக்கு ஒத்திக்கு கேட்டனர்.
மீட்டுத்தர வேண்டும்
அதன்படி நான், அவர்கள் 2 பேருக்கும் வீட்டை ஒத்திக்கு கொடுத்தேன். ஆனால் அவர்கள் எனக்கு பணம் தரவில்லை. பலமுறை அவர்களிடம் கேட்டேன். ஆனாலும் அவர்கள் பணத்தை கொடுப்பதாக கூறி இழுத்தடித்து வருகின்றனர். இதனால் பணத்தை கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை, வீட்டை திருப்பி தாருங்கள் என்று கூறினேன். ஆனால் அவர்களிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.எனவே என்னிடம் வீட்டை ஒத்திக்கு எடுத்து பணம் கொடுக்காதவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து வீட்டை மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
சப்-இன்ஸ்பெக்டர் மனைவி கைது
இதுகுறித்து தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து ராதிகாவை கைது செய்தனர். மேலும் இதில் சம்பந்தப்பட்ட மற்றொரு நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.கைதான ராதிகாவின் கணவர் தற்போது ஆயுதப்படையில் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.