சேலத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு


சேலத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு
x

ஒரே வாரத்தில் 28 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டதால் சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் முககவசம் அணிய சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

சேலம்

ஒரே வாரத்தில் 28 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டதால் சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் முககவசம் அணிய சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா பாதிப்பு தொடங்கியது. அதன்பிறகு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவித்தாலும் 2021-ம் ஆண்டு கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்டியது. சேலம் மாவட்டத்தில் கொரோனாவால் பலர் பாதிக்கப்பட்ட நிலையில் உயிரிழப்புகளும் அதிகமாகின. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்ததை தொடர்ந்து பொதுமக்கள் இயல்பு நிலைக்கு திரும்பினர்.

இந்தநிலையில், சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த மாத தொடக்கத்தில் கொரோனா பாதிப்பு இல்லாத நிலையில் கடந்த 3-ந் தேதி ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர் 4-ந் தேதி 2 பேருக்கு தொற்று ஏற்பட்டது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கொரோனாவுக்கு 28 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மீண்டும் அதிகரிப்பு

இதனிடையே, நேற்று முன்தினம் மட்டும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரியிலும், சிலர் அவர்களது வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கொரோனா பரவல் மீண்டும் அதிகரிப்பால் சேலத்தில் சுகாதாரத்துறையினர் மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தினர் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர். மாநகராட்சி மட்டுமின்றி புறநகர் பகுதிகளிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

25 பேருக்கு சிகிச்சை

சேலத்தில் தேதி வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் விவரம் வருமாறு:- மார்ச்-3 தேதி-ஒருவர், 4-ந் தேதி 2 பேர், 5-ந் தேதி ஒருவர், 6-ந் தேதி ஒருவர், 7-ந் தேதி 3 பேர், 8-ந் தேதி ஒருவர், 9-ந் தேதி 2 பேர், 10-ந் தேதி 4 பேர், 11-ந் தேதி 5 பேர், 12-ந் தேதி 3 பேர், 13-ந் தேதி 3 பேர், 14-ந் தேதி 7 பேரும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.

சேலம் மாவட்டத்தை பொறுத்தவரையில் இதுவரை 1 லட்சத்து 32 ஆயிரத்து 61 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டனர். அவர்களில் 1 லட்சத்து 30 ஆயிரத்து 272 பேர் குணமடைந்து வீடு திரும்பிஉள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு 1,764 பேர் இறந்துள்ளனர்.

தற்போது 25 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியதால் பொதுமக்கள் முககவசம் அணியவும், பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.


Next Story