கொடைக்கானலில் நகராட்சி அதிகாரிக்கு கொரோனா
கொடைக்கானலில் நகராட்சி அதிகாரிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. தமிழகத்திலும் தொற்று பாதிப்பு நாளுக்குநாள் கணிசமாக உயர்ந்து வருகிறது. இந்தநிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகராட்சியில் பணியாற்றி வரும் நகர்நல அலுவலர், கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னைக்கு வேலை தொடர்பாக சென்று வந்தார். இந்தநிலையில் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து கொடைக்கானல் திரும்பிய அவர் கொரோனா பரிசோதனை செய்துகொண்டார். அப்போது அவருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார். அவரை வட்டார மருத்துவக்குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும் நகர்நல அலுவலருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள உள்ளதாக வட்டார மருத்துவக்குழுவினர் தெரிவித்தனர். இதனால் நகராட்சி அலுவலக பணியாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.
கொடைக்கானல் மலைப்பகுதியில் ஓராண்டுக்கு பிறகு தற்போது கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொடைக்கானலுக்கு வருகை தரும் அனைத்து சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் முககவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.