கோவில்களில் கொரோனா கட்டுப்பாடுகள் சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு


கோவில்களில் கொரோனா கட்டுப்பாடுகள் சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு
x

கோவில்களில் கொரோனா கட்டுப்பாடுகள் சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு செய்யப்படும் என்று ஸ்ரீரங்கத்தில் அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

திருச்சி

கோவில்களில் கொரோனா கட்டுப்பாடுகள் சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு செய்யப்படும் என்று ஸ்ரீரங்கத்தில் அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

முன்னேற்பாடு பணிகள்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று ஆய்வு செய்தார். முன்னதாக அவர் கருடாழ்வார் சன்னதி, மூலவர் ரெங்கநாதர், தாயார் சன்னதிகளில் தரிசனம் செய்தார். பின்னர் விழாவிற்கான முன்னேற்பாடுகளை பார்வையிட்டு அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டு வருகிறது. வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறும் 20 நாட்களில் 17 லட்சம் பக்தர்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதில் குறிப்பாக சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியான 2-ந் தேதி 2 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடமாடும் மருத்துவமனை

பக்தர்கள் அதிகமாக கூடும் இடங்களில் மருத்துவத்துறை, போலீஸ் துறை உள்ளிட்ட துறையினர் தயார் நிலையில் உள்ளனர். கோவில் சார்பில் திறக்கப்பட்டிருக்கின்ற மருத்துவமனையில் 2 மருத்துவர்கள், 2 செவிலியர்கள், 2 உதவியாளர்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பணிபுரிந்து வருகிறார்கள்.

நான்கு கோபுர வாசல்களிலும் நடமாடும் மருத்துவமனைகளை அமைப்பதற்கும் ஆலோசித்து இருக்கின்றோம். தீப்பிடிப்பது போன்ற சம்பவங்கள் நடைபெற்றால் உடனடியாக அதனை தடுக்க 4 தீயணைப்பு வண்டிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு 60 தீயணைப்பு வீரர்கள் 24 மணிநேரமும் சுழற்சி முறையில் பணியாற்ற இருக்கின்றார்கள். 12 இடங்களில் குடிநீர் தொட்டிகள் அமைப்பதற்கு மாவட்ட கலெக்டர் ஏற்பாடு செய்துள்ளார்.

கொரோனா கட்டுப்பாடுகள்

ரூ.4 ஆயிரம், ரூ.700 என்ற கட்டணம் சிறப்பு தரிசனத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு தரிசனம்வேண்டும் என மனு கொடுப்பவர்களுக்கு பரிசீலனை செய்து வழங்குவார்கள். மேலும் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து இந்த திருவிழாவில் கலந்து கொள்பவர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். அந்த வகையில் அவர்களுடைய மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு எந்த தவறும் ஏற்படாமல் முழுமையாக வெளிப்படைத்தன்மையோடு வழங்க கேட்டுக்கொண்டுள்ளேன்.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்காணித்து வருகிறார். கோவில்களில் கொரோனா கட்டுப்பாடுகள் சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு செய்யப்படும். மாற்றுத்திறனாளிகள், பாலூட்டும் தாய்மார்கள், 60 வயதை கடந்த மூத்தோர், உடல்நலம் குன்றியவர்கள் எப்போதும் போல் சிறப்பு தரிசனத்தில் அனுமதிக்கப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் அமைச்சர் இந்துசமய அறநிலையத்துறை சார்பில் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 2 ஓதுவார்களுக்கு பணிநியமன ஆணையை வழங்கினார்.

அப்போது, கலெக்டர் பிரதீப்குமார், ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ. பழனியாண்டி, இந்துசமய அறநிலையத்துறை திருச்சி மண்டல இணைஆணையர் செல்வராஜ், இணைஆணையர்கள் மாரிமுத்து, சுதர்சன், கல்யாணி, போலீஸ் துணை கமிஷனர் அன்பு, உதவி கமிஷனர் நிவேதாலெட்சுமி மற்றும் அறநிலையத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.


Next Story