1,800 மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம்
மாவட்டத்தில் நாளை 1,800 மையங்களில் சிறப்பு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி:
தடுப்பூசி முகாம்
தமிழக முதல்-அமைச்சர் உத்தரவுப்படி நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாநிலம் தழுவிய மாபெரும் சிறப்பு மெகா கொரோனா தடுப்பூசி முகாம் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெற உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தம் 1,800 மையங்களில் நடைபெற உள்ளது.
இதுவரை கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் செலுத்திக்கொள்ளாதவர்கள், 2-வது தவணை செலுத்திக்கொள்ள வேண்டியவர்கள் பயனடையும் வகையில் கொரோனா தடுப்பூசி முகாம் காலை ஒரு இடத்திலும், மாலை வேறு இடத்திலும் என மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ள வார்டு பகுதிகளிலும், ஊராட்சி மற்றும் கிராம பகுதிகளிலும், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைகளில் என பல்வேறு இடங்களில் நடத்தப்பட உள்ளது.
முன்னுரிமை
இந்த வாய்ப்பினை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தி கொண்டு தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். இதில் 12 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளாத ஆசிரியர்களும் மற்றும் கல்வித்துறை பணியாளர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
மேலும், முதல் தவணை தடுப்பூசி கோவிஷீல்டு செலுத்திக்கொண்டவர்கள் 84 நாட்கள் கழித்தும் முதல் தவணை கோவேக்சின் செலுத்திக்கொண்டவர்கள் 28 நாட்கள் கழித்தும் 2-வது தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம். கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் கொரோனா நோயினால் பாதிக்கப்படவில்லை அப்படி நோய் தொற்று உறுதியானாலும் உயிர் சேதம் மற்றும் தீவிர நோய் தொற்று ஏற்படுவதில்லை
எனவே 2 தவணை தடுப்பூசியை போட்டுக்கொண்டவர்கள் தங்கள் வீட்டையும் சமுதாயத்ததையும் பாதுகாத்துக்கொள்ள முடியும். மேலும் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள், 2 தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்ட நபர்கள் 273 நாட்கள் கழித்து பூஸ்டர் டோஸ் தடுப்பூசியினை செலுத்தி கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.