திருச்சியில் வேகமாக பரவும் கொரோனா
திருச்சி மாவட்டத்தில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 89 ஆக உயர்ந்துள்ளது.
திருச்சி மாவட்டத்தில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 89 ஆக உயர்ந்துள்ளது.
89 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் சென்னை, கோவை, சேலத்துக்கு அடுத்தபடியாக திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. திருச்சி விமான நிலையத்தில் வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு ரேண்டமாக 2 சதவீதம் பேருக்கு மட்டுமே தற்போது பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
திருச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 76 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். இந்தநிலையில் நேற்று கூடுதலாக 17 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதேநேரம் 4 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 89 பேரில் பலர் தங்கள் வீடுகளிலும், சிலர் அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் தனிமைபடுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
9.1 சதவீதமாக அதிகரிப்பு
மேலும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேநேரம் திருச்சி மாவட்டத்தில் கடந்த மாதம் 14-ந்தேதி 1.4 சதவீதமாக இருந்த கொரோனா தொற்று பரவல் வேகம் நேற்று முன்தினம் நிலவரப்படி 9.1 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இதனால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும் படியும், வெளியிடங்களுக்கு சென்றால், சமூக இடைவெளியை கடைபிடிப்பதுடன், கட்டாயம் அனைவரும் முககவசம் அணிய வேண்டும் என்று சுகாதாரத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அரியலூர், பெரம்பலூர், கரூர், புதுக்கோட்டை
இதுபோல் அரியலூர் மாவட்டத்தில் 28 பேரும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 22 பேரும், பெரம்பலூர் மாவட்டத்தில் 10 பேரும், கரூர் மாவட்டத்தில் 6 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.