தமிழகத்தில் 12.62 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி -அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
தமிழகத்தில் நேற்று நடைபெற்ற 36-வது மெகா தடுப்பூசி முகாமில் 12.62 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
மெகா தடுப்பூசி முகாம் குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு ஆஸ்பத்திரிகள் உள்ளிட்ட 50 ஆயிரம் இடங்களில் நேற்று 36-வது சிறப்பு மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதுவரை நடந்த 35 மெகா தடுப்பூசி முகாம்களில் 5 கோடியே 22 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.
12-14 வயதுக்கு உட்பட்டவர்களில் இதுவரை முதல் தவணையாக 19 லட்சத்து 82 ஆயிரத்து 269 பேருக்கும் (93.46 சதவீதம்), 2-ம் தவணையாக 15 லட்சத்து 31 ஆயிரத்து 542 (72.21 சதவீதம்) பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதேபோல் 15-17 வயதுக்கு உட்பட்டவர்களில் இதுவரை முதல் தவணையாக 30 லட்சத்து 52 ஆயிரத்து 562 பேருக்கும் (91.23 சதவீதம்), 2-ம் தவணையாக 25 லட்சத்து 89 ஆயிரத்து 18 பேருக்கும் (77.38 சதவீதம்) தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
12.62 லட்சம் பேருக்கு...
பூஸ்டர் தடுப்பூசியை பொறுத்தவரை 79 லட்சத்து 68 ஆயிரத்து 331 பேருக்கு (18.92 சதவீதம்) இதுவரை செலுத்தப்பட்டு உள்ளது. இந்தநிலையில் நேற்று நடைபெற்ற சிறப்பு மெகா தடுப்பூசி முகாமில் 12 லட்சத்து 62 ஆயிரத்து 89 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.
இதில் முதல் தவணையாக 61 ஆயிரத்து 202 பேருக்கும், 2-ம் தவணையாக 2 லட்சத்து 98 ஆயிரத்து 634 பேருக்கும், பூஸ்டர் தடுப்பூசி என்ற வகையில் 9 லட்சத்து 2 ஆயிரத்து 253 பேருக்கும் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முதல் தவணையாக 96.49 சதவீதமும், 2-ம் தவணையாக 91.09 சதவீதமும் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
மாநிலத்தில் நேற்று நடைபெற்ற சிறப்பு மெகா தடுப்பூசி முகாமை முன்னிட்டு இன்று (திங்கட்கிழமை) கொரோனா தடுப்பூசி பணிகள் நடைபெறாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.