மதுரையில் கொரோனா பாதிப்பு: சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்க 50-ஐ கடந்தது
மதுரையில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை, 50-ஐ கடந்துள்ளது.
மதுரையில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை, 50-ஐ கடந்துள்ளது.
கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வெகுவாக அதிகரித்து வருகிறது. கடந்த காலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்திருந்தநிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. இதனால், தமிழக அரசும் கொரோனா முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக கடைபிடித்து வருகிறது.
பொதுமக்களும், அரசின் வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தி உள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக மதுரையிலும், கொரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால், அரசு ஆஸ்பத்திரி வளாகத்திற்கு வரும் நபர்கள் கண்டிப்பான முறையில் முககவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சிகிச்சையில் 51 பேர்
இதுகுறித்து அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் கூறுகையில், மதுரையில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதனால் சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
மதுரையில் கடந்த 1-ந்தேதி நிலவரப்படி, கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்றவர்களின் எண்ணிக்கை 17 ஆக இருந்தது. ஆனால், நேற்றைய நிலவரப்படி மதுரையில் சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளது.
அவர்களில் ஒரு சிலர் மட்டுமே அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருக்கின்றனர். அவர்கள் இணை நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பதால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். மீதமுள்ளவர்கள், வீட்டு தனிமைப்படுத்துதலில் சுகாதாரத்துறையின் கண்காணிப்பில் இருக்கின்றனர்.
தடுப்பூசி முக்கியம்
நாளுக்கு நாள் அதிக அளவில் பரிசோதனைகள் செய்யப்பட்டு வருவதால், வரும் நாட்களிலும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, பொது இடங்களுக்கு செல்லும்போது கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும். அதுபோல், அடிக்கடி கைகளை கழுவி சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்.
கொரோனா தொடர்பான அறிகுறிகள் இருந்தால் அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அதுபோல், அரசு அறிவுறுத்தியபடி கொரோனா தடுப்பூசியையும் செலுத்தி கொள்ள வேண்டும் என்றனர்.