ஈரோடு மாநகராட்சி மன்ற கூட்டம்: மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு


ஈரோடு மாநகராட்சி மன்ற கூட்டம்: மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு
x

தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரோடு மாநகராட்சி மன்ற கூட்டத்தில் இருந்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளி நடப்பு செய்தனர்.

ஈரோடு

ஈரோடு

தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரோடு மாநகராட்சி மன்ற கூட்டத்தில் இருந்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளி நடப்பு செய்தனர்.

அவசர கூட்டம்

ஈரோடு மாநகராட்சி மன்ற அவசர கூட்டம் மாநகராட்சி கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மேயர் சு.நாகரத்திரனம் தலைமை தாங்கினார். ஆணையாளர் சிவக்குமார், துணை மேயர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மண்டல தலைவர்கள் பி.கே.பழனிச்சாமி, சசிக்குமார், குறிஞ்சி தண்டபாணி மற்றும் வார்டு கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் ஈரோடு மாநகராட்சியில் சுய நிதிக்குழு உறுப்பினர்களை தூய்மை பணி, மலேரியா ஒழிப்பு பணிகளுக்கு நியமனம் செய்வது. முதல்-அமைச்சரின் பள்ளிக்குழந்தைகளுக்கான காலை சிற்றுண்டி திட்டத்துக்கு சமையல் கூடம் அமைத்தல், சோலார் புதிய பஸ் நிலைய பணி, மத்திய பஸ் நிலையத்தை முழுமையான டவுன் பஸ் நிலையமாக மாற்றுவதற்கான பணி உள்ளிட்ட 29 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

வேண்டுகோள்

மாநகராட்சி மேயர் சு.நாகரத்தினம் பேசும்போது, சென்னையில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை சிறந்த முறையில் நடத்துவதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி. 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையான குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை செயல்படுத்தும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி என்று குறிப்பிட்டு பேசினார்.

மேலும், ஈரோடு மாநகராட்சியில் நடைபெறும் அடுத்த மன்ற கூட்டத்தில் இருந்து கவுன்சிலர்கள் கூட்டத்தில் கேட்க விரும்பும் கேள்விகள் குறித்து கூட்டம் நடைபெறுவதற்கு முதல் நாளிலேயே கேள்விகளை மேயரிடம் வழங்க வேண்டும். இந்த மாமன்றமானது பெரியார், மா.சுப்பிரமணியம், அரங்கராசன் ஆகியோரால் வழிநடத்தப்பட்ட பெருமைக்கு உரியது. எனவே இந்த கூட்டத்துக்கான மாண்பினை பாதுகாத்து, மாநகரப்பணிகள் சிறப்பாக நடைபெற கவுன்சிலர்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

அ.தி.மு.க. வெளிநடப்பு

கூட்டத்தில், அ.தி.மு.க. கவுன்சிலர்கள் சார்பில் மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் தங்கமுத்து, கவுன்சிலர்கள் ஏ.ஆர்.ஜெகதீசன், தங்கவேல் ஆகியோர் பேசினார்கள். அவர்கள் பேசும்போது, அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் ஏராளமான ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து பொதுமக்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது. ஆனால், தண்ணீர் வினியோக பணியாளர்கள் இல்லை. எனவே கூடுதல் பணியாளர்கள் நியமிக்க வேண்டும். மாநகராட்சி மன்ற கூட்ட அரங்கத்தில் முன்னாள் கவுன்சிலர்கள் குழுப்படங்களை வைக்க வேண்டும். மாநகராட்சி நல மருத்துவமனைகளில் டாக்டர்கள், செவிலியர்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை எழுப்பினார்கள்.

அப்போது தி.மு.க. கவுன்சிலர் ஒருவருடன் அ.தி.மு.க. கவுன்சிலர்களுக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் சமாதானம் அடைந்த அ.தி.மு.க.வினர், தமிழ்நாட்டில் மின்சார கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்வதாக அறிவித்தனர். அப்போது பேசிய தி.மு.க. கவுன்சிலர் செல்லப்பொன்னி அரங்கராசன், மத்திய அரசின் உதய் மின் திட்டத்தில் அ.தி.மு.க. கையொப்பமிட்டதால்தான் இந்த மின்கட்டண உயர்வு. எனவே மின்கட்டண உயர்வு குறித்து அ.தி.மு.க. பேசக்கூடாது என்று குரல் எழுப்பினார்.

ஆனால், மேயரிடம் கோரிக்கை மனுக்களை வழங்கிய அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 6 பேரும் கூட்ட அரங்கத்தை விட்டு வெளியேறினார்கள். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story