சூரமங்கலத்தில் 42 தெருநாய்களை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்தனர்
சூரமங்கலம்:-
சூரமங்கலம் பகுதியில் 19 பேரை வெறிநாய் கடித்த சம்பவத்தை தொடர்ந்து அந்த பகுதியில்் சுற்றித்திரிந்த 42 தெருநாய்களை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்தனர்.
19 பேரை கடித்தது
சேலம் சூரமங்கலம் அந்தோணிபுரம் ஓடை பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. நேற்று முன்தினம் பொதுமக்கள் சாலையில் நடந்து சென்றபோது அங்கிருந்த வெறிநாய் ஒன்று நடந்து சென்று கொண்டிருந்தவர்களை திடீரென கடிக்க தொடங்கியது.
ஒருவரை அடுத்து ஒருவரை விடாமல் 2 சிறுவர்கள் உள்பட 19 பேரை வெறிநாய் கடித்தது. இதில் அனைவரும் காயம் அடைந்தனர். இவர்கள் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றனர்.
அந்தோணிபுரம் ஓடை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இந்த சம்பவம் தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டனர். அப்போது அவர்கள் தெருநாய்களை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினர்.
தெருநாய்கள் பிடிக்கும் பணி
இதைத்தொடர்ந்து மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் பிரகாஷ் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் சுமார் 10-க்கும் மேற்பட்டோர் சூரமங்கலம் பகுதியில் சுற்றித்திரிந்த தெருநாய்களை பிடிக்க சென்றனர்.
குறிப்பாக அந்தோணிபுரம் ஓடைப்பகுதி, ஆசாத் நகர், தர்ம நகர், அம்பேத்கர் நகர், ஜங்ஷன் மெயின் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் தெருக்களில் சுற்றித்திரிந்த சுமார் 42-க்கும் மேற்பட்ட தெரு நாய்களை நேற்று பிடித்தனர்.
பின்னர் அந்த தெருநாய்களை சேலம் வாய்க்கால் பட்டறையில் உள்ள கருத்தடை அறுவடை சிகிச்சை மையத்திற்கு கொண்டு சென்றனர். மேலும் தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை தீவிரமாக பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.