சாலையில் சுற்றி திரிந்த மாடுகளை பிடித்த மாநகராட்சி ஊழியர்கள்
நெல்லையில் சாலையில் சுற்றி திரிந்த மாடுகளை பிடித்த மாநகராட்சி ஊழியர்கள் பிடித்து சென்றனர்.
நெல்லை மாநகர பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. இதனால் சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளை பிடித்து, அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கும்படி மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி உத்தரவிட்டார். அதன்படி நெல்லை மண்டல சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில், சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளை பிடிக்கும் பணி நேற்று நடந்தது.
நெல்லை டவுன் ரத வீதிகள், தெற்கு மவுண்ட் ரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று, சாலைகளில் சுற்றி திரிந்த மாடுகளை பிடித்தனர். அப்போது மவுண்ட் ரோட்டில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றி திரிந்த 4 பசு மாடுகளை சுகாதார பணியாளர்கள் பிடித்தனர்.
பின்னர் அந்த மாடுகளை நெல்லை டவுன் போலீஸ் நிலையம் எதிரே உள்ள வார்டு அலுவலகத்தில் கட்டி வைத்தனர். அதன் உரிமையாளர்களுக்கு உரிய அபராதம் செலுத்தி அழைத்து செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது.