உழவர் சந்தையில் மாநகராட்சி மேயர் திடீர் ஆய்வு
உழவர் சந்தையில் மாநகராட்சி மேயர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
வேலூர் டோல்கேட்டில் உள்ள ஊழவர் சந்தையில் மாநகராட்சி மேயர் சுஜாதா திடீர் ஆய்வு செய்தார். அப்போது அங்கு காய்கறி கழிவுகள் கொட்டப்பட்டிருந்தது. இதனை பார்த்த அவர் விவசாயிகள் காய்கறி கழிவுகளை இந்த வளாகத்தில் கொட்டக் கூடாது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும். வரும் காலம் மழை காலம் என்பதால் நீங்கள் வியாபாரம் செய்யும் இடத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். மீறி காய்கறி கழிவுகளை இங்கு கொட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்தார். பின்னர் விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம் பிரித்து சுகாதார பணியாளர்களிடம் வழங்க வேண்டும் என கூறி அது குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். ஆய்வின்போது மாநகராட்சி கவுன்சிலர் அருணா விஜயகுமார், மாநகராட்சி சுகாதார அலுவலர் (பொறுப்பு) முருகன், 3-வது மண்டல சுகாதார ஆய்வாளர் சிவகுமார் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.