திண்டுக்கல் பஸ் நிலையத்தில் 34 கடைகளை ஏலம் விட்டது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்; மாநகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்


திண்டுக்கல் பஸ் நிலையத்தில் 34 கடைகளை ஏலம் விட்டது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்; மாநகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்
x

திண்டுக்கல் பஸ் நிலையத்தில் புதிதாக கட்டப்பட்ட 34 கடைகளை ஏலம் விட்டது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று மாநகராட்சி கூட்டத்தில் பா.ஜ.க. கவுன்சிலர் தனபாலன் வலியுறுத்தினார்.

திண்டுக்கல்

திண்டுக்கல் பஸ் நிலையத்தில் புதிதாக கட்டப்பட்ட 34 கடைகளை ஏலம் விட்டது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று மாநகராட்சி கூட்டத்தில் பா.ஜ.க. கவுன்சிலர் தனபாலன் வலியுறுத்தினார்.

மாநகராட்சி கூட்டம்

திண்டுக்கல் மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் மாநகராட்சி கூட்ட அரங்கில் இன்று நடந்தது. இதற்கு மேயர் இளமதி தலைமை தாங்கினார். துணை மேயர் ராஜப்பா, ஆணையாளர் சிவசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதையடுத்து மாநகராட்சி வளர்ச்சி பணிகள் குறித்த தீர்மானங்களும் ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேற்றப்பட்டன. பின்னர் கூட்டத்தில், கொண்டுவரப்பட்ட தீர்மானங்கள் குறித்து மேயர், கவுன்சிலர்கள் இடையே விவாதம் நடைபெற்றது. அதன் விவரம் வருமாறு:-

பா.ஜ.க. கவுன்சிலர் தனபாலன்:- திண்டுக்கல் பஸ் நிலையத்தில் புதிதாக கட்டப்பட்ட 34 கடைகள் ஏலம் விடப்பட்டுள்ளன. ஆனால் கவுன்சிலர்களுக்கு முறையான அறிவிப்பு இல்லை. மேலும் ஏலத்தில் கலந்துகொள்ளாதவர்களுக்கு கடைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக புகார் வருகிறது. எனவே கடைகள் ஏலம் விட்டது தொடர்பாக மாநகராட்சி நிர்வாகம் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

மேயர்:- கூடுதல் தொகைக்கு யார் கடைகளை வாடகைக்கு கேட்டார்களோ அவர்களுக்கு அரசு விதிமுறைப்படி கடைகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

துணை மேயர்:- கடைகள் ஏலம் விடுவதில் அரசு விதிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளன. முறைகேடு நடப்பதற்கு வாய்ப்பே இல்லை.

பயணிகள் நிழற்குடை

பா.ஜ.க. கவுன்சிலர்:- திண்டுக்கல் பஸ் நிலையத்தில் பயணிகள் நிழற்குடை இல்லை. மழைக்காலம் தொடங்குவதற்குள் அதை கட்ட வேண்டும். 14-வது வார்டு பகுதியில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறுகிறது. அடைப்பை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆணையாளர்:- உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

கவுன்சிலர் கார்த்தி:- பஸ் நிலையத்தில் டேன் டீ கடை அமைக்க அனுமதி வழங்குவது தொடர்பான தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும்.

கவுன்சிலர் முகமது இலியாஸ்:- டேன் டீக்கடை தீர்மானத்தை நிறைவேற்றக்கூடாது.

எதிர்க்கட்சி தலைவர் ராஜ்மோகன்:- டேன் டீ விவகாரத்தில் நீதிமன்ற பரிந்துரையை மாநகராட்சி பின்பற்ற வேண்டும். அதற்கு இடம் ஒதுக்க அனுமதிப்பது தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும்.

மேயர்:- டேன் டீ கடை அமைக்க அனுமதிப்பது குறித்த தீர்மானத்தை ரத்து செய்வது தொடர்பாக உரிய பரிந்துரை அளிக்கப்படும்.

கிணற்றை காணோம்...

கவுன்சிலர் பாஸ்கரன்:- 'கிணற்றை காணோம்' என்ற சினிமா வசனம் போல் 34 வார்டு பகுதியில் அடிப்படை வசதிகள் எதையும் காணமுடிவதில்லை. அதற்கான நிதியும் ஒதுக்கப்படுவதில்லை.

துணை மேயர்:- அனைத்து வார்டுகளுக்கும் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கவுன்சிலர் ஜானகிராமன்:- வார்டு பகுதியில் உள்ள சாக்கடை கால்வாய்கள் தூர்வாரப்படாமல் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மழைக்காலத்தில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து தெருவில் தேங்கும். இதனை தடுக்க வேண்டும். மேலும் மழை காலத்தை எதிர்கொள்ள தனிக்குழு அமைக்க வேண்டும்.

தூய்மை நகராக்க வேண்டும்

எதிர்க்கட்சி தலைவர் ராஜ்மோகன்:- திண்டுக்கல் நகரில் குப்பைகளை முறையாக அகற்றி தூய்மை நகராக மாற்ற வேண்டும். தெருக்களில் சாலை அமைக்கும் போது பேவர் பிளாக் கற்களை தவிர்த்து தார்சாலை அமைக்க வேண்டும். வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து எப்போது கேட்டாலும் நிதி எல்லை என்று கூறுகிறீர்கள்.

மேயர்:- நகரை தூய்மைப்படுத்த தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பேவர் பிளாக் சாலை முறையை கொண்டு வந்ததே அ.தி.மு.க. அரசு தான். அவர்கள் ஆட்சி காலத்தில் தான் திண்டுக்கல் மாநகராட்சிக்கு 34 கோடி கடன் ஏற்பட்டது. இதனாலேயே வளர்ச்சி பணிகளுக்கு நிதி ஒதுக்க முடியவில்லை.

எதிர்க்கட்சி தலைவர்:- அ.தி.மு.க. ஆட்சியின் போது தான் மாநகராட்சி கூட்ட அரங்கில் இருந்த மைக்குகள் துரதிஷ்டவசமாக மாயமானதாக கூறுகின்றனர். இதே அ.தி.மு.க. ஆட்சியில் கிடைத்த அதிர்ஷ்டத்தால் தான் திண்டுக்கல் மாநகராட்சியாக தரம் உயர்ந்துள்ளது.

ஆணையாளர்:- அரசியல் விவாதத்தை தவிர்ப்போம்.

மேற்கண்டவாறு விவாதம் நடந்தது.


Next Story