குப்பை வரியை ரத்து செய்ய வேண்டும்-ஈரோடு மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் கோரிக்கை


குப்பை வரியை ரத்து செய்ய வேண்டும்-ஈரோடு மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் கோரிக்கை
x

குப்பை வரியை ரத்து செய்ய வேண்டும் என்று ஈரோடு மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்து பேசினார்கள்.

ஈரோடு

குப்பை வரியை ரத்து செய்ய வேண்டும் என்று ஈரோடு மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்து பேசினார்கள்.

மாமன்ற கூட்டம்

ஈரோடு மாநகராட்சி மாமன்ற சாதாரண கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் தலைமை தாங்கினார். துணை மேயர் செல்வராஜ், ஆணையாளர் சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனா்.

இந்த கூட்டத்தில், 58-வது வார்டுக்கு உள்பட்ட சுள்ளிவலசு, ஜீவானந்தம் ரோடு, நமச்சிவாயம் வீதி, பார்வதி கிருஷ்ணா வீதி ஆகிய இடங்களில் ரூ.18 லட்சம் செலவில் கான்கிரீட் சாலை அமைக்க ஒப்பந்த ஏலம் விடுவது, 60-வது வார்டு லட்சுமி நகரில் ரூ.9 லட்சம் செலவில் பொதுக்கழிப்பிடம் கட்டுவது, 30-வது வார்டில் ரூ.38 லட்சம் செலவில் தார் சாலை மற்றும் மழைநீர் வடிகால் அமைப்பது உள்பட மொத்தம் 24 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடர்ந்து மாநகராட்சி கவுன்சிலர்கள் தங்களது வார்டு கோரிக்கைகள் தொடர்பாக பேசினார்கள்.

போராட்டம்

மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் தங்கமுத்து பேசும்போது கூறியதாவது:-

தற்போது புதிய அரசாணை கொண்டு வர முயற்சி நடப்பதாக தெரிகிறது. புதிய அரசாணை அமல்படுத்தப்பட்டால் மாமன்றத்தின் அதிகாரம் குறைய வாய்ப்புள்ளது. இதுகுறித்து மேயர் மாநகராட்சி ஆணையாளர் விளக்கம் அளிக்க வேண்டும். மாநகராட்சிக்கு முன்பு இருந்ததுபோல் முழு அதிகாரம் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லை என்றால் அ.தி.மு.க. சார்பில் போராட்டம் நடத்தப்படும்.

11-வது வார்டு, 48-வது வார்டு பகுதிகளில் பாதாள சாக்கடை திட்ட பணிகளுக்கு வீடுகளில் இணைப்பு வழங்கப்படவில்லை. ஆனாலும் பாதாள சாக்கடைக்கான சேவை வரி கேட்டு அதிகாரிகள் நெருக்கடி கொடுக்கிறார்கள். இதனை உடனடியாக திரும்ப பெற வேண்டும். இதேபோல் 3-ம் மண்டல சுகாதார ஆய்வாளர் தன்னிச்சையாக செயல்படுகிறார். கவுன்சிலா்கள் கேட்கும் கோரிக்கைகளை செய்து கொடுப்பதில்லை. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

வைப்பு தொகை

16-வது வார்டு கவுன்சிலர் ஈ.பி.ரவி கூறியதாவது:-

ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட பன்னீர்செல்வம் பூங்கா, காளைமாட்டு சிலை அருகில் 2 ஒருங்கிணைந்த வணிக வளாகங்கள் கட்டப்பட்டு உள்ளன. இதற்கான கடைகள் ஏலம் அடுத்த மாதம் நடைபெற உள்ளதாக தெரிகிறது. ஆனால் வைப்பு தொகை அதிகமாக இருக்கிறது. ஏழை வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எனவே உடனடியாக மறுபரிசீலனை செய்து வைப்பு தொகையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொடர்ந்து கவுன்சிலர்கள் பேசும்போது கூறியதாவது:-

முதலாவது மண்டலத்தில் மைய நூலகம் அமைந்துள்ள சாலையில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. அங்கு சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும். பேபி வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டதால் குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் சூழ்ந்து நிற்கிறது. பேபி வாய்க்காலை தூர்வாரி சீரமைக்க வேண்டும். பாரதி நகரில் பாதாள சாக்கடையில் இருந்து கழிவுநீர் வெளியேறுவதால் சுகாதார கேடு ஏற்படுகிறது.

குப்பை வரி

கனிராவுத்தர்குளம் பகுதியில் இருந்து பி.பி.அக்ரஹாரம் செல்லும் சாலையின் நடுவில் தடுப்புச்சுவர் உள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். இந்த தடுப்புச்சுவரை அகற்ற வேண்டும். மாநகராட்சியில் குப்பை வரி விதிக்கப்பட்டு உள்ளதை ரத்து செய்ய வேண்டும். இதுதொடர்பாக அரசுக்கு கோரிக்கையை அனுப்பி வைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும். நேதாஜி சாலை, காரை வாய்க்கால் பகுதிகளில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். அங்கு கழிவுநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story