திருத்தங்கல் மண்டல அலுவலகங்களை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்


திருத்தங்கல் மண்டல அலுவலகங்களை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்
x

திருத்தங்கல் மண்டல அலுவலகங்களை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என மாநகராட்சி கவுன்சிலர்கள் கோரிக்கை வைத்தனர்.

விருதுநகர்

சிவகாசி,

திருத்தங்கல் மண்டல அலுவலகங்களை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என மாநகராட்சி கவுன்சிலர்கள் கோரிக்கை வைத்தனர்.

மண்டல அலுவலகம்

சிவகாசி மாநகராட்சியுடன் திருத்தங்கல் நகராட்சி பகுதி இணைக்கப்பட்ட நிலையில் அங்குள்ள பழைய நகராட்சி அலுவலகத்தை மண்டல அலுவலகமாக செயல்படுத்த மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இதை தொடர்ந்து அந்த அலுவலகத்துக்கு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் என 21 பேரை மாநகராட்சி நிர்வாகம் பணி அமர்த்தி அத்தியாவசிய பணிகளை மேற்கொண்டு வந்தது.

இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அந்த மண்டல அலுவலகத்தில் இருந்து அனைத்து பொருட்களையும் எடுத்து வந்து மாநகராட்சி ஊழியர்கள் சிவகாசி மாநகராட்சி அலுவலகத்தில் வைத்துவிட்டதாக கூறப்படுகிறது.

வரி வசூல் மையம்

இதைதொடர்ந்து வரி வசூல் மையம் மட்டும் திருத்தங்கலில் செயல்பட்டு வந்தது. இதனால் திருத்தங்கல் பகுதி மக்கள் தங்கள் பகுதியில் மாநகராட்சி அதிகாரிகளை கொண்டு செய்ய வேண்டிய அத்தியாவசிய பணிகளை செய்ய யாரிடம் புகார் தெரிவிப்பது என்று தெரியாமல் சம்பந்தப்பட்ட மாநகராட்சி கவுன்சிலர்களிடம் தெரிவித்தனர்.

கவுன்சிலர்கள் தங்கள் வார்டு பிரச்சினைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவிக்க மண்டல அலுவலகத்துக்கு சென்ற போது அங்கு அதிகாரிகள் யாரும் இல்லாததை கண்டு திடுக்கிட்டனர். இதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளை போன் மூலம் தொடர்பு கொண்டு கேட்ட போது அவர்கள் சிவகாசி மாநகராட்சி அலுவலகத்தில் அமர்ந்து பணிகளை செய்து வருவதாக தெரிவித்தனர்.

உறுதி

இதனை தொடர்ந்து தி.மு.க.வின் திருத்தங்கல் நகர பொறுப்பாளர் உதயசூரியன் தலைமையில் தி.மு.க.கவுன்சிலர்கள் மாநகராட்சி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தியை நேரில் சந்தித்து மண்டல அலுவலம் மீண்டும் செயல்பட தேவையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.

அதற்கு கமிஷனர் தனக்கு தெரியாமல் இந்த சம்பவம் நடந்துள்ளதாகவும், உடனே பழையபடி திருத்தங்கலில் மண்டல அலுவலகம் செயல்பட தேவையான நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்தார். இதனை தொடர்ந்து கவுன்சிலர்கள் கலைந்து சென்றனர்.

இதுகுறித்து மண்டல அலுவலக அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, திருத்தங்கல் அலுவலகத்தில் பதிவேடுகளை பாதுகாப்பான முறையில் பராமரிக்க முடியவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story