தி.மு.க. அரசின் 2-வது ஊழல் பட்டியலை விரைவில் வெளியிடுவேன்


தி.மு.க. அரசின் 2-வது ஊழல் பட்டியலை விரைவில் வெளியிடுவேன்
x

எந்த வழக்கையும் சந்திக்க தயார் என்றும், தி.மு.க. அரசின் 2-வது ஊழல் பட்டியலை விரைவில் வெளியிடுவேன் என்றும் ஏற்காட்டில் பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.

சேலம்

ஏற்காடு:

அண்ணாமலை

சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே நாகலூர் கிராமத்தில் உள்ள எஸ்.டி.நகரில் வாழ்ந்து வரும் மலைவாழ் மக்களை நேற்று பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை சந்தித்து, குறைகளை கேட்டு அறிந்தார். பின்னர் அவர் மத்திய அரசு மலைவாழ் மக்களுக்கு வழங்கி வரும் சலுகைகள் மற்றும் திட்டங்களை விளக்கி கூறினார். மேலும் மலைவாழ் மக்கள் தங்களது குறைகளை அண்ணாமலையிடம் தெரிவித்தனர். அதனை கேட்ட அவர், குறைகளை தீர்க்க பா.ஜனதா கட்சியின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

அதன் பின்னர் அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஊழலை மறைக்க முடியாது

தமிழகத்தை ஆளும் தி.மு.க. செய்துவரும் ஊழல் குறித்து கூறினால் எங்கள் மீது வழக்கு தொடர்ந்து வாயை அடைத்து விட முடியும் என்று நினைப்பது தவறு. எந்த வழக்கையும் சந்திக்க தயாராக இருக்கிறேன். தொழில்நுட்பம் வளர்ந்துள்ள காலத்தில் ஊழலை யாரும் மறைக்க முடியாது. ஊர்ஜிதம் செய்த பின்பு ஊழல் தொடர்பான 2-வது பட்டியலை விரைவில் வெளியிடுவேன். அந்த பட்டியல் முதல் பட்டியலை விட 10 மடங்கு அதிகமானதாக இருக்கும்.

எந்த காரணத்திற்காகவும் கர்நாடகத்தில் மேகதாது அணை கட்டப்படக்கூடாது. மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு எடுக்கும் முடிவுக்கு தமிழக பா.ஜனதா உறுதுணையாக இருக்கும்.

மிரட்டுவதை நிறுத்த வேண்டும்

ஆதீனம், தீட்சிதர் விவகாரத்தில் மாநில அரசின் நடவடிக்கை மிரட்டும் தொனியில் உள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை தி.மு.க. அரசு மதிக்கவில்லை. மதுரை ஆதீனம் மீது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கங்கணம் கட்டிக்கொண்டு பேசி வரும் வார்த்தைகள் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆதீனம் அரசை குறை கூறவில்லை. கோவில் மாநில அரசின் கட்டுப்பாட்டில் வரக்கூடாது என்று தான் கூறியுள்ளார்.

எந்த இடத்திலும் அரசையோ அல்லது அமைச்சர்களையோ குறைகூறவில்லை. அவரது கருத்தை கூறியுள்ளார். எனவே அரசியலை தாண்டி இருக்க கூடிய ஆதீனம் போன்றவர்களை மிரட்டுவதை அமைச்சர் சேகர்பாபு நிறுத்திக்கொள்ள வேண்டும்.

சம்பந்தம் இல்லை

இந்து கோவிலுக்கு மட்டும் இந்து சமய அறநிலை துறை அமைத்து உள்ளார்கள். அவர்களது செயல்பாடுகளால் பிரச்சினைகள் தான் வருகிறது. சாமானிய மக்களுக்கு இந்து சமய அறநிலை துறையால் எந்த நல்லதும் நடக்கவில்லை.

பிரதான எதிர்க்கட்சியை மக்கள் தான் முடிவு செய்கிறார்கள். தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியாக பா.ஜனதாவை, தி.மு.க. தான் உருவாக்கி கொண்டுள்ளது. பா.ஜனதா கட்சியின் எண்ணம் பிரதான எதிர்க்கட்சியாவது அல்ல. ஆளும் கட்சியாக வருவது.தி.மு.க. அண்ணா வளர்த்த கட்சி என்கிறார்கள். ஆனால் அவர் வளர்த்த தி.மு.க.வுக்கும், இப்போது உள்ள தி.மு.க.வுக்கும் சம்பந்தம் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.

மாற்றுக்கட்சியினர்

தொடர்ந்து, சேலம் மரவனேரி பகுதியில் உள்ள மாதவம் அரங்கில் மாற்றுக்கட்சியினர் 100-க்கும் மேற்பட்டவர்கள் மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பா.ஜனதா கட்சியில் இணைந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் அண்ணாமலை பேசும் போது, நல்லதொரு உன்னதமான அரசியல் கட்சியிலும், முக்கியமான ஒரு காலக்கட்டத்திலும் நீங்கள் இணைந்துள்ளீர்கள். ஒரு பக்கம் பிரதமரின் 8 ஆண்டு கால சாதனை ஆட்சியையும், மற்றொரு பக்கம் ஒரு ஆண்டு தி.மு.க.வின் வேதனை ஆட்சியையும் பார்த்துள்ளீர்கள். தமிழகத்தை பொறுத்தவரை மாற்று அரசியலை எந்த கட்சியால் கொடுக்க முடியும், ஊழல் இல்லாத நேர்மையான அரசியலை யாரால் செய்ய முடியும் என்பதை உணர்ந்து கொண்டு பலர் பா.ஜனதா கட்சிக்கு வந்து சேருகிறார்கள். சேலத்தில் நாளை (இன்று) ஒரு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. இந்த கூட்டம் தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்றார். நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட தலைவர் சுரேஷ்பாபு மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story