குடிசை வீடு- 3 மோட்டார் சைக்கிள்கள் தீ வைத்து எரிப்பு; கார் கண்ணாடிகளையும் அடித்து நொறுக்கிய மர்ம நபர்கள்


குடிசை வீடு- 3 மோட்டார் சைக்கிள்கள் தீ வைத்து எரிப்பு; கார் கண்ணாடிகளையும் அடித்து நொறுக்கிய மர்ம நபர்கள்
x
தினத்தந்தி 9 Oct 2022 12:15 AM IST (Updated: 9 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவைகுண்டம் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் குடிசை வீடு மற்றும் 3 மோட்டார் சைக்கிள்கள் தீ வைத்து எரிக்கப்பட்டது. மேலும் 2 கார் கண்ணாடிகளையும் மர்நபர்கள் அடித்து நொறுக்கினர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி

ஸ்ரீவைகுண்டம்:

ஸ்ரீவைகுண்டம் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் குடிசை வீடு மற்றும் 3 மோட்டார் சைக்கிள்கள் தீ வைத்து எரிக்கப்பட்டது. மேலும் 2 கார் கண்ணாடிகளையும் மர்நபர்கள் அடித்து நொறுக்கினர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மோட்டார் சைக்கிள்கள் எரிப்பு

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சிக்கு உட்பட்ட 1-வது வார்டு பிச்சனார்தோப்பு பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு வீடுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டிருந்த சக்திவேல், பேச்சிமுத்து, முருகன் ஆகியோரது 3 மோட்டார் சைக்கிள்களுக்கு மர்ம நபர்கள் தீ வைத்துச் சென்றனர்.

மேலும், கே.டி.கே நகர் பகுதியில் ஒரு சமுதாய கொடியும் தீவைத்து எரிக்கப்பட்டது. அருகில் இருந்த ஒரு குடிசை வீீட்டுக்கும் மர்ம நபர்கள் தீ வைத்து தப்பிச் சென்றனர். உடனே, அக்கம்பக்கத்தினர் தீயை அணைத்தனர். மேலும், அதே பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களையும் மர்மநபர்கள் உடைத்துச் சென்றனர்.

கார் கண்ணாடிகளும் உடைப்பு

இதேபோல் அருகில் உள்ள மேலகோட்டைவாசல் தெருவில் நிறுத்தப்பட்டிருந்த கணேசன், ராமர் ஆகியோரது 2 கார்களின் கண்ணாடிகளையும் மர்மநபர்கள் அடித்து நொறுக்கினர். காரின் அருகே தீப்பெட்டி குச்சிகள் சிதறிக் கிடந்ததால் கார்களுக்கு தீ வைக்க முயற்சி செய்திருக்கலாம் என தெரிகிறது.

மேலும், நல்லபெருமாள் என்ற ராஜா என்பவருடைய சமையல் கியாஸ் ஏற்றி செல்லும் லோடு ஆட்டோவின் கண்ணாடிகளும் அடித்து நொறுக்கப்பட்டிருந்தது.

மர்மநபர்களுக்கு வலைவீச்சு

தகவல் அறிந்ததும் ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு மாயவன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டனர். அங்கு கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை கொண்டு மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

இச்சம்பவங்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளதால் அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் தடுக்க அப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Next Story