சிவப்பு நாவாய் பூச்சியை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
பருத்தி பயிரில் சிவப்பு நாவாய் பூச்சியை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.
நீடாமங்கலம்:-
பருத்தி பயிரில் சிவப்பு நாவாய் பூச்சியை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சிவப்பு நாவாய் பூச்சி
சிவப்பு நாவாய் பூச்சி பருத்தி காய்களில் உள்ள சாற்றை உறிஞ்சும் தன்மை உடையது. இதனால் இளம் காய்கள் சரியாக உருவாகாமல், பழுப்பு நிறமாக மாறி, பஞ்சு கறை பிடித்து காய்கள் அழுகியும் இருக்கும். நாவாய் பூச்சியினால் பாதிக்கப்பட்ட விதைகளை விதைக்காகவோ, எண்ணெய் எடுப்பதற்கோ, கால்நடை தீவனத்திற்கோ பயன்படுத்த முடியாது.
சிறிய நாவாய்ப் பூச்சிகள் வெடித்த காய்களில் பஞ்சின் மேல் அமர்ந்து சாற்றை உறிஞ்சி கழிவுகளை பஞ்சின் மேல் விடுவதால் கறை படிந்து போய்விடும்.
கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
இவற்றை கட்டுப்படுத்த தொடர்ந்து பருத்தி பயிரிடுவதை தவிர்க்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு ஒரு விளக்குப்பொறி வைத்து நாவாய் பூச்சிகளை அழிக்கலாம். தாவர பூச்சிக்கொல்லிகளான வேப்ப எண்ணெய் 2 சதவீதம் அல்லது வேப்பங்கொட்டை கரைசலை 5 சதவீதம் ஒரு லிட்டர் தண்ணீருடன் கலந்து தெளிக்க வேண்டும். செயற்கை பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தியும் சிவப்பு நாவாய் பூச்சிகளை கட்டப்படுத்தலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.