கனமழையால் பருத்தி பயிர்கள் பாதிப்பு
கோட்டூர் பகுதியில் கனமழையால் பருத்தி பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோட்டூர் பகுதியில் கனமழையால் பருத்தி பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பருத்தி சாகுபடி
தமிழக அரசு கோடை காலத்தில் நெல் சாகுபடி மேற்கொள்வதை விவசாயிகள் தவிர்க்க வேண்டும் என தொடர்ந்து அறிவுறுத்தி வந்தது. அத்துடன் தண்ணீர் அதிகம் தேவைப்படாத பருத்தி, பச்சை பயறு, உளுந்து, சூரியகாந்தி போன்ற பணப்பயிர்களை பயிரிட வேண்டும் எனவும் விவசாயிகளை அறிவுறுத்தியது.
அரசின் அறிவுறுத்தலை ஏற்று திருவாரூர் மாவட்டத்தில் விவசாயிகள் 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி பணியினை மேற்கொண்டனர். கோட்டூர் ஒன்றியத்தில் மட்டும் 5,200 ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி மேற்கொள்ளப்பட்டது.
கனமழையால் பாதிப்பு
அறுவடை செய்த பருத்தியினை விற்பனை செய்ய ஏதுவாக திருவாரூர், பேரளம், குடவாசல், வலங்கைமான் உள்ளிட்ட இடங்களில் உள்ளதை போன்று அரசின் ஒழுங்குமுறை விற்பனைக்கூட வசதி கோட்டூர் பகுதியில் இல்லை. இதனால் கோட்டூர் பகுதியை சேர்ந்த பருத்தி விவசாயிகள் பருத்தியை விற்பதற்கு சிரமப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழையினால் கோட்டூர் பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த பருத்தி மழையில் நனைந்து கடும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த பருத்தியை விற்பனை செய்யமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இதுதவிர பூக்கும் பருவத்தில் உள்ள பருத்தி செடிகளும் மழையால் பாதிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
நிவாரணம் வழங்க வேண்டும்
மாற்றுப்பயிர் சாகுபடி செய்யும்படி தமிழக அரசு விவசாயிகளை அறிவுறுத்தியது. அதன்படி கோட்டூர் ஒன்றியத்தில் மாற்றுப்பயிராக பருத்தி சாகுபடி செய்திருந்த நிலையில் மழையால் பொருளாதார இழப்பு ஏற்பட்டு உள்ளது. பாதிக்கப்பட்ட பருத்தி பயிருக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.10 ஆயிரத்துக்கு மேல் நிவாரணம் வழங்கினால் மட்டுமே பருத்தி சாகுபடி மேற்கொண்ட விவசாயிகளை பாதுகாக்க முடியும். நிவாரணம் வழங்குவதன் மூலம் வருங்காலங்களில் பருத்தி விவசாயத்தையும் ஊக்குவிக்க முடியும்.
அரசு நிவாரணம் வழங்காவிடில் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். இவ்வாறு விவசாயிகள் கூறினர்.