பஞ்சு வியாபாரி தற்கொலை
பஞ்சு வியாபாரி தற்கொலை செய்துகொண்டார்.
தி்ண்டுக்கல்-பழனி சாலையில் உள்ள நாட்டார்காரதெருவை சேர்ந்தவர் அங்குசாமி (வயது 57). இவர் பஞ்சு வியாபாரம் செய்து வந்தார். இதற்காக பழனி சாலையில் கடை வைத்துள்ளார். இவருக்கு ராஜலட்சமி என்ற மனைவியும், ஈஸ்வரி என்ற மகளும் உள்ளனர். ஈஸ்வரிக்கு திருமணமாகி விட்டது. இதனால் அங்குசாமி, ராஜலட்சுமி தம்பதியினர் தனியாக வசித்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று காலை அங்குசாமியை எழுப்புவதற்காக அவரது அறைக்கு ராஜலட்சுமி சென்றார். அப்போது அங்கு, அங்குசாமி தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். அதை கண்டு அதிர்ச்சி அடைந்த ராஜலட்சுமி திண்டுக்கல் மேற்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று அங்குசாமியின் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
விசாரணையில், பஞ்சு வியாபாரத்தில் அங்குசாமிக்கு நஷ்டம் ஏற்பட்டதால், தொழிலை மேம்படுத்த அவர் லட்சக்கணக்கில் கடன் வாங்கியதாக தெரிகிறது. மேலும் தொழிலில் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டதால், கடனை திரும்ப செலுத்த முடியாமல் அவர் தவித்துள்ளார். இதனால் விரக்தியில் இருந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் கூறினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.