செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம்
தேசிய வேளாண் மின்னணு சந்தை திட்டம் மூலம் செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் நடந்தது. இதில் அதிகபட்சமாக ஒரு குவிண்டால் பருத்தி ரூ.11ஆயிரத்து 269-க்கு விலை போனது.
பொறையாறு;
தேசிய வேளாண் மின்னணு சந்தை திட்டம் மூலம் செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் நடந்தது. இதில் அதிகபட்சமாக ஒரு குவிண்டால் பருத்தி ரூ.11ஆயிரத்து 269-க்கு விலை போனது.
பருத்தி ஏலம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்த ஆண்டு ஒரு லட்சத்து 24 ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்துள்ளனர்.மயிலாடுதுறை மாவட்டத்தில் முன்கூட்டியே பருத்தி சாகுபடி செய்திருந்த விவசாயிகளின் பருத்திகள் வெடித்து விற்பனைக்கு தயாரானதால், முன்கூட்டியே விற்பனைக்கூடங்களை திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.இதை ஏற்று மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் நேற்று முதல் திறக்கப்பட்டுள்ளன. முதற்கட்டமாக நாகை விற்பனைகுழுவுக்கு உட்பட்ட மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நேற்று மாலை பருத்தி மறைமுக ஏலம் நடைபெற்றது. டெல்டா மாவட்டங்களிலேயே முதல் முறையாக தேசிய வேளாண் மின்னணு சந்தைத் திட்டத்தின்கீழ் (இ-நாம்) இந்த மறைமுக பருத்தி ஏலம் நடைபெற்றது.
விவசாயிகள் மகிழ்ச்சி
நாகை விற்பனைக்குழுச் செயலாளர் ரமேஷ் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஏலத்தில் 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். தஞ்சை, நாகப்பட்டினம், தேனி, சேலம், விழுப்புரம், திருப்பூர் போன்ற மாவட்டங்களில் இருந்து மில் அதிபர்கள் மற்றும் வியாபாரிகள் பங்கேற்று, சுமார் 250 குவிண்டால் பருத்தியை ஏலத்தில் எடுத்தனர். இதில் அதிகபட்சமாக ஒரு குவிண்டால் பருத்தி ரூ.11ஆயிரத்து 269-க்கு விலை போனது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பருத்திக்கு கூடுதல் விலை கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.