ரூ.3 கோடியே 72 லட்சத்துக்கு பருத்தி விற்பனை
திருவாரூரில் நடந்த ஏலத்தில் ரூ.3 கோடியே 72 லட்சத்துக்கு பருத்தி விற்பனையானது
திருவாரூர் மாவட்டத்தில் 16 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் பருத்தி சாகுபடி நடைபெற்றது. தற்போது பருத்தி பஞ்சுகள் அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. விவசாயிகள் அறுவடை செய்த பருத்தி பஞ்சுகளை ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்கள் மூலம் மறைமுக ஏலத்தில் விற்பனை செய்து வருகின்றனர். அதன்படி திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடந்த ஏலத்தில் பருத்தி பஞ்சுகளை விவசாயிகள் ஏலத்துக்கு கொண்டு வந்தனர்.கும்பகோணம், பண்ருட்டி, செம்பனார்கோவில் போன்ற பகுதிகளில் இருந்து வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனர். வியாபாரிகள், விவசாயிகள் கொண்டு வந்த பருத்தியை பார்வையிட்டு, தாங்கள் கேட்கும் தொகையை ஏலச் சீட்டில் எழுதி பெட்டியில் போட்டனர்.இதைத்தொடர்ந்து திருவாரூர் விற்பனைக்குழு செயலாளர் சரசு தலைமையில் கண்காணிப்பாளர் செந்தில் முருகன் மற்றும் மேற்பார்வையாளர் முருகானந்தம் ஆகியோர் முன்னிலையில் ஏலப்பெட்டியை திறந்து வியாபாரிகள் கேட்ட விலையை படித்தனர். இதில் அதிகபட்சமாக ஒரு குவிண்டால் பருத்தி ரூ.11 ஆயிரத்து 276-க்கும், குறைந்தபட்சமாக ஒரு குவிண்டால் பருத்தி ரூ.10 ஆயிரத்து 9-க்கும் விலை போனது. இந்த ஏலத்தில் ரூ.3 கோடியே 72 லட்சம் மதிப்பில் பருத்தி விற்பனையானது.