நியாயமான விலைக்கு பருத்தியை கொள்முதல் செய்ய வேண்டும்


நியாயமான விலைக்கு பருத்தியை கொள்முதல் செய்ய வேண்டும்
x
தினத்தந்தி 6 Jun 2023 12:15 AM IST (Updated: 6 Jun 2023 3:36 PM IST)
t-max-icont-min-icon

ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை உடனடியாக திறந்து நியாயமான விலைக்கு பருத்தியை கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர்

கொரடாச்சேரி:

ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை உடனடியாக திறந்து நியாயமான விலைக்கு பருத்தியை கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பருத்தி சாகுபடி

திருவாரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு 41 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது திருவாரூர் மாவட்டம் விக்கிரபாண்டியம், புழுதிகுடி, சபாபதிபுரம், பள்ளவராயன்கட்டளை, சேந்தங்குடி, செருவாமணி, மாரங்குடி, ஆலத்தூர், காரியமங்கலம், குலமாணிக்கம், கோட்டூர், சோழங்கநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பருத்தி எடுக்கும் பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

குறைந்தவிலைக்கு பருத்தி கொள்முதல்

மன்னார்குடி அருகே விக்கிரபாண்டியம், செருவாமணி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகளிடமிருந்து 1 கிலோ பருத்தியை ரூ.48 முதல் ரூ.50 வரை குறைந்த விலைக்கு தனியார் வியாபாரிகள் கொள்முதல் செய்வதாகவும், இதனால் விவசாயிகளுக்கு மிகப்பெரிய பொருளாதார இழப்பு ஏற்படுவதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

கடந்தாண்டு அதிக விலைக்கு பருத்தி விலை போனதன் காரணமாக இந்த ஆண்டு கூடுதலாக பருத்தி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளதாகவும், இதுவரை திருவாரூர் மாவட்டத்தில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் திறக்கப்படாததன் காரணத்தினால் தனியார் வியாபாரிகள் இதனை பயன்படுத்திக்கொண்டு குறைந்த விலைக்கு பருத்தியை கொள்முதல் செய்வதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

நியாயமான விலைக்கு

எனவே உடனடியாக ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை திறந்து நியாயமான விலைக்கு விவசாயிகளிடம் இருந்து பருத்தி கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story