பஞ்சு,நூல் விலையை கட்டுப்படுத்த வேண்டும்


பஞ்சு,நூல் விலையை   கட்டுப்படுத்த வேண்டும்
x

பஞ்சு,நூல் விலையை கட்டுப்படுத்த வேண்டும்

திருப்பூர்

அவினாசி

அவினாசியில் நடந்த தமிழ்நாடு விசைத்தறி தொழிலாளர் சம்மேளன மாநில குழு கூட்டத்தில் பஞ்சு, நூல் விலையை கட்டுப்படுத்த வலியுறுத்தப்பட்டது.

மாநில குழு கூட்டம்

தமிழ்நாடு விசைத்தறி தொழிலாளர் சம்மேளன மாநில குழு கூட்டம் அவினாசி சி.ஐ.டி.யு. அலுவலகத்தில் மாநிலத்தலைவர் பி.முத்துசாமி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் எம்.சந்திரன், மாநில பொருளாளர் எம்.அசோகன் உள்பட மாநில நிர்வாகிகள் மற்றும் மாநிலக்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் மத்திய அரசின் தவறான கொள்கை காரணமாக விசைத்தறி தொழில் பெறும் நெருக்கடியில் உள்ளது. இந்த நிலையில் நூல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்தது. இதன் காரணமாக பெரும் போராட்டங்களுக்கு பின்பு ஓரளவு குறைந்த நிலையில், தற்போது பஞ்சு விலை ஒரு பேலுக்கு ரூ.15ஆயிரம் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக நூல் விலையும் உயர்ந்துள்ளது. இதனால் தொழில் நெருக்கடியும், தொழிலாளர்களுக்கு வேலையிழப்பும் உருவாகியுள்ளது.

கட்டுப்படுத்த வேண்டும்

இதில் மத்திய அரசும், மாநில அரசும் உடனடியாக தலையிட்டு பஞ்சு மற்றும் நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். இதனைத்தொடர்ந்து மத்திய அரசு மின்சார திருத்த சட்ட மசோதா கொண்டு வந்துள்ளது. இதனால் மிகப்பெரிய அளவில் எதிர்ப்பு உருவாகியுள்ளது. இச்சட்ட மசோதாவால் மின்சார கட்டணம் உயர்ந்துள்ளது.

இதன் காரணமாக விசைத்தறி தொழிலுக்கு இலவச மின்சாரம் 750 யூனிட் பறிபோகும், கைத்தறி, விவசாயிகளுக்கு, இலவச மின்சாரம், ரத்து ஆகும் சூழ்நிலை உருவாகியுள்ளது. மின்சாரம் தனியாருக்கு வழங்கப்படும். அதேபோல மின்சாரத்துறையில் பணியாற்றும் பல லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும்.

ஆர்ப்பாட்டம்

ஆகவே மத்திய அரசு இந்த சட்டத்தினை திரும்பப் பெற வேண்டும், அதேபோல தமிழக அரசு அறிவித்துள்ள உத்தேச மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும், விசைத்தறி தொழிலை பாதுகாக்க வேண்டும், விசைத்தறி தொழிலாளி மற்றும் அனைத்து தொழிலாளர்களுக்கும் 20 நாட்களுக்கு முன்பு தீபாவளி போனசை வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து அடுத்த மாதம் (செப்டம்பர்) 5-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை தமிழக முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.



Next Story