ராஜபாளையத்தில் பஞ்சு வியாபாரிகள் போராட்டம்
மின் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி ராஜபாளையத்தில் பஞ்சு வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராஜபாளையம்,
மின் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி ராஜபாளையத்தில் பஞ்சு வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மின்கட்டணம் உயர்வு
ராஜபாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட நூற்பாலைகளில் பருத்தி ஆலை கழிவு பஞ்சில் இருந்து நூல் தயாரிக்கும் பணிகள் நடந்து வருகிறது.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த கட்டணத்தை விட தற்போதைய மின்சார நிலைக்கட்டணம் 430 விழுக்காடு உயர்ந்து உள்ளதாகவும், பீக் ஹவர்ஸ் என்று சொல்லக்கூடிய பரபரப்பு நேரத்தில் மின்சார கட்டணத்தை 2 மடங்கு உயர்த்தி உள்ளதாகவும் இதனால் தற்போது தொழில் நசிந்து வருவதாகவும், பல ஆலைகள் மூடப்பட்டு விட்டதாகவும், சில ஆலைகள் மூடக்கூடிய நிலையில் இருப்பதாகவும் உரிமையாளர்கள் வேதனை தெரிவித்தனர்.
கட்டாய வசூல்
இதனால் இந்த தொழில்களை நம்பியுள்ள தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நூற்பாலை மற்றும் அதனை சார்ந்த தொழில்களை காப்பாற்ற கோரி ராஜபாளையத்தில் தமிழக முதல்-அமைச்சருக்கு மனு அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் பஞ்சு வியாபாரிகள், நூற்பாலை மற்றும் ஜின்னிங் ஆலை உரிமையாளர்கள் என 60-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். டி.பி. மில்ஸ் சாலையில் அமைந்துள்ள அஞ்சல் அலுவலகம் வரை ஊர்வலமாக வந்தனர். 430 விழுக்காடு உயர்த்தப்பட்ட நிலை கட்டணத்தை முழுவதும் திரும்ப பெற வேண்டும். தொழிற்சாலையின் மேற்கூரையில் சோலார் பேனல் மின் உற்பத்திக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ.1.53 பைசா கட்டாய வசூல் செய்வதை தடுக்க வேண்டும்.
சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு புதிதாக விதிக்கப்பட்ட பீக் ஹவர் எனப்படும் பரபரப்பு நேர கட்டணத்தை திரும்ப பெற வேண்டும். வருடத்திற்கு ஒரு முறை 6 சதவீதம் மின் கட்டணம் உயர்த்துவதை தவிர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முதல்-அமைச்சரின் கவனத்தை ஈர்ப்பதற்காக விரைவு தபால் அனுப்பினர்.