கவுன்சிலரை காரில் கடத்தி 40 பவுன் நகை பறிப்பு; 9 பேருக்கு வலைவீச்சு


கவுன்சிலரை காரில் கடத்தி 40 பவுன் நகை பறிப்பு; 9 பேருக்கு வலைவீச்சு
x

புளியங்குடி அருகே கவுன்சிலரை காரில் கடத்திச் சென்று 40 பவுன் தங்க நகைகளை பறித்து சென்ற 9 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தென்காசி

புளியங்குடி:

புளியங்குடி அருகே கவுன்சிலரை காரில் கடத்திச் சென்று 40 பவுன் தங்க நகைகளை பறித்து சென்ற 9 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஒன்றிய கவுன்சிலர்

தென்காசி மாவட்டம் புளியங்குடியை அடுத்த தலைவன்கோட்டை பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த முத்து பாண்டியன் என்பவருடைய மகன் விஜயபாண்டியன் (வயது 36). இவர் நகரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவராக உள்ளார். மேலும் வாசுதேவநல்லூர் ஊராட்சியில் தலைவன்கோட்டை ஒன்றிய கவுன்சிலராகவும் உள்ளார். இவரிடம் பணம் கேட்டு சிலர் அடிக்கடி மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது. இவர் பணம் கொடுக்க மறுத்து வந்துள்ளார்.

இந்த நிலையில் 5-ந் தேதி இரவு 10 மணி அளவில் விஜயபாண்டியன் தலைவன்கோட்டையில் இருந்து சங்கரன்கோவிலுக்கு காரில் சென்று கொண்டிருந்தார். வாசுதேவநல்லூரை சேர்ந்த டிரைவர் செல்வகுமார் காரை ஓட்டினார்.

காரில் கடத்தல்

சங்கரன்கோவில்- புளியங்குடி ரோட்டில் சென்றபோது திடீரென 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த மலையடிக்குறிச்சியைச் சேர்ந்த வெள்ளத்துரை, சங்கன்திரட்டை சேர்ந்த ஆறு என்ற ஆறுமுகம், கருப்பா, சிவா உள்ளிட்ட 8 பேர் கொண்ட கும்பல் காரை வழிமறித்தனர். செல்வகுமாரை இறக்கி விட்டுவிட்டு அதே காரில் விஜய பாண்டியனை நடுவக்குறிச்சி கிராமம் அருகே கடத்திச் சென்றனர். ரூ.50 லட்சம் பணம் வேண்டும் என்றும், தராவிட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

விஜய பாண்டியன் வீட்டில் இருந்து உடனடியாக பணம் வந்து கொடுத்தால்தான் விடுவிப்போம் எனவும் கூறியுள்ளனர்.

40 பவுன் நகை பறிப்பு

மேலும் அவரிடம் இருந்த ரூ.15 லட்சம் மதிப்புள்ள தங்க சங்கிலி, பிரேஸ்லெட், மோதிரங்கள் உள்ளிட்ட 40 பவுன் தங்க நகைகளை பறித்துக் கொண்டனர். மேலும் இதுகுறித்து போலீசாரிடம் புகார் செய்யக்கூடாது எனவும் எச்சரித்து உள்ளனர்.

அந்த நேரத்தில் அந்த ரோட்டில் போலீசார் ரோந்து வாகனம் வரவே அவரை அங்கேயே விட்டு விட்டு தப்பிச் சென்றனர். அவர்களிடம் இருந்து தப்பித்த விஜயபாண்டியன் போலீசாரிடம் புகார் செய்தார். உடனடியாக புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் உத்தரவின் பேரில் புளியங்குடி இன்ஸ்பெக்டர் ராஜாராம் வழக்குப்பதிவு செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் பரத்லிங்கம் மற்றும் போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

டிரைவருக்கும் தொடர்பு

மேலும் போலீசார் நடத்திய தொடர் விசாரணையில், விஜய பாண்டியனின் கார் டிரைவரான செல்வகுமாருக்கும் இந்த சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. எனவே போலீசார் தலைமறைவாகியுள்ள டிரைவர் செல்வகுமார் மற்றும் 8 பேர் கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.


Next Story