வழக்கு தொடர்ந்த கவுன்சிலர் கடத்தப்பட்ட விவகாரம்: கரூர் மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் தேர்தலுக்கு தடை விதிக்க ஐகோர்ட்டு மறுப்பு
வழக்கு தொடர்ந்த கவுன்சிலர் கடத்தப்பட்ட வழக்கில் கரூர் மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் தேர்தலுக்கு தடை விதிக்க ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது
கரூர் மாவட்ட பஞ்சாயத்து வார்டு கவுன்சிலர் திருவிகா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், "கரூர் மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் தேர்தலை ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் நடத்த வேண்டும். முழு தேர்தலையும் வீடியோ பதிவு செய்ய தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, 19-ந்தேதி (அதாவது நேற்று) கரூர் மாவட்ட பஞ்சாயத்து துணை சேர்மன் பதவிக்கான தேர்தலை நடத்தலாம். அதை வீடியோ பதிவு செய்யவும், இந்த வழக்கில் இறுதி உத்தரவு வரும் வரை தேர்தல் முடிவை வெளியிடக்கூடாது. தேர்தல் நடந்தது குறித்து வருகிற 22-ந் தேதி இந்த கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மனுதாரர் பாதுகாப்பு கோரி போலீசாரை அணுகலாம், என உத்தரவிட்டது.
இந்தநிலையில் நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் ஆகியோர் நேற்று பிற்பகலில் வழக்குகளை விசாரித்தனர். அப்போது துணை தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளரும், மனுதாரரமான திருவிகா சார்பில் ஆஜரான வக்கீல், இன்று(அதாவது நேற்று) தேர்தல் ஏற்பாடு நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் மனுதாரரை மர்மநபர்கள் காரில் கடத்தி சென்றுவிட்டனர். எனவே துணை தலைவர் தேர்தலை நடத்த தடை விதிக்க வேண்டும் என்று முறையிட்டார்.
அதற்கு நீதிபதிகள், இதுதொடர்பான வழக்கு வருகிற 22-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. அன்றைய தினம் இதுகுறித்து விசாரிக்கலாம் என தெரிவித்தனர்.