ரூ.1½ கோடியில் மழைநீர் வடிகால்கள் அமைக்க நடவடிக்கை கவுன்சிலர் ராஜசேகர் தகவல்


ரூ.1½ கோடியில் மழைநீர் வடிகால்கள் அமைக்க நடவடிக்கை கவுன்சிலர் ராஜசேகர் தகவல்
x

திருச்சி மாநகராட்சி 34-வது வார்டில் ரூ.1½ கோடியில் மழைநீர் வடிகால்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கவுன்சிலர் ராஜசேகர் கூறினார்.

திருச்சி

திருச்சி மாநகராட்சி 34-வது வார்டில் ரூ.1½ கோடியில் மழைநீர் வடிகால்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கவுன்சிலர் ராஜசேகர் கூறினார்.

குறைகளுக்கு தீ்ர்வு

திருச்சி மாநகராட்சி 34-வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் ராஜசேகர். தி.மு.க.வை சேர்ந்த இவர் தினமும் வார்டு மக்களை சந்தித்து குறைகளை தீர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறார். 34-வது வார்டில் கீழப்புதூர், துரைசாமிபுரம், பாரதிநகர், அம்மன்கோவில்தெரு, திரு.வி.க.தெரு உள்பட பல பகுதிகள் உள்ளன. இந்த வார்டில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து கவுன்சிலர் ராஜசேகர் கூறியதாவது:-

மணல்வாரித்துறை மெயின்ரோட்டில் தார்சாலை அமைக்கப்பட்டுள்ளது. கீழப்புதூர் குறுக்குதெரு மற்றும் குருவிக்காரத்தெருவில் கான்கிரீட் சாலை போடப்பட்டுள்ளது. வார்டு முழுவதும் 150 இடங்களில் 90 வாட்ஸ் பல்புகள் பொருத்தப்பட்டுள்ளது. மணல்வாரித்துறைரோட்டில் உள்ள மயானத்தை மின்மயானமாக்க கோரிக்கை வைத்துள்ளேன்.

மழைக்காலங்களில் சுமார் 6 வார்டுகளில் இருந்து வழிந்து செல்லும் மழைதண்ணீர் காஜாப்பேட்டை அரசமரத்தடி பஸ்நிறுத்தம் அருகே தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள். அங்கு மழைநீர் வடிகால்கள் அமைத்து தர வேண்டுகோள் வைத்தேன். இதனை ஏற்று, ரூ.1½ கோடியில் மழைநீர் வடிகால்கள் அமைக்க மேயர் உறுதி அளித்துள்ளார்.

போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு

துரைசாமிபுரம் 2-வது தெருவில் உய்யகொண்டான்வாய்க்கால் குறுக்கே இணைப்புபாலம் கட்டித்தர அமைச்சர் கே.என்.நேருவிடம் வைத்த கோரிக்கையை தொடர்ந்து, பொதுநிதியில் இருந்து இணைப்புபாலம் கட்டித்தர அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். சங்கிலியாண்டபுரம் மெயின்ரோடு மிகவும் குறுகலாக இருப்பதால் காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கிறது. குறிப்பாக பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் தவிக்கிறார்கள். ஆகவே இதற்கு தீர்வு ஏற்படுத்தும் வகையில், சங்கிலியாண்டபுரம் மெயின்ரோட்டை ஒருவழிப்பாதையாக மாற்றி வாகனங்கள் போக்குவரத்து நெருக்கடி இன்றி சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொழுதுப்போக்கு பூங்கா

காஜாப்பேட்டை அரசமரத்தடி அருகே மாநகராட்சிக்கு சொந்தமான சுமார் ஒரு ஏக்கர் இடத்தின் மீது கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை விரைந்து முடித்து அங்கு பொழுதுபோக்குப்பூங்கா அல்லது ஆரம்ப சுகாதார நிலையம் கட்டித்தர வேண்டும். 34-வது வார்டில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் முடிவுற்றபிறகு அனைத்து இடங்களிலும் தார்சாலைகள் போடப்படும். மேலும், எனது வார்டில் ரேஷன்கடை, சமுதாயக்கூடம், அங்கன்வாடி கட்டிடமும் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story