விவசாயிகள் பெயரில் வண்டல் மண் எடுத்து வியாபாரம் செய்யும் அதிகாரிகள் மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டத்தில் கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு


விவசாயிகள் பெயரில் வண்டல் மண் எடுத்து வியாபாரம் செய்யும் அதிகாரிகள் மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டத்தில் கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு
x

விவசாயிகள் பெயரில் வண்டல் மண் எடுத்து அதிகாாிகள் வியாபாரம் செய்வதாக மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டத்தில் கவுன்சிலர்கள் குற்றச்சாட்டி உள்ளனா்.

கடலூர்

கடலூர் மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் திருமாறன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ரிஸ்வானா பர்வீன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாவட்ட கவுன்சிலர்கள் தங்கள் கோரிக்கைகள் குறித்து பேசினர். அதுபற்றிய விவரம் வருமாறு:-

கவுன்சிலர் சித்ரா ராமையன் (த.வா.க.):- விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஏரியில் வண்டல் மண் எடுக்க அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால் தையல்குணாம்பட்டினம் ஏரி, டி.பாளையம் ஏரி உள்ளிட்ட பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரிகளில் விவசாயிகள் பெயரில் அனுமதி பெற்று, குறிஞ்சிப்பாடி உதவி பொறியாளர் மண் எடுத்து, வியாபாரம் செய்து வருகிறார். அதனால் அதிகாரிகள், இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

கவுன்சிலர் சண்.முத்துக்கிருஷ்ணன்(பா.ம.க.):- கடலூர் சிப்காட்டில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரால் நிலத்தடி நீர்மட்டம் மாசடைந்து வருகிறது. அப்பகுதி மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கிட மாசுகட்டுப்பாட்டு வாரியம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மக்கள் வாழவே தகுதியற்ற பகுதியாக உள்ளது. இந்த நிலை நீடித்தால் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தை மூடும் போராட்டத்தை நடத்துவோம் என்றார்.

கவுன்சிலர் சக்திவிநாயகம்(தி.மு.க.):- வார்டுகளில் விலையில்லா ஆடு, மாடு வழங்கும் போதும், பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் பயனாளிகள் தேர்வு போன்ற எந்த திட்டப்பணிகள் நடந்தாலும் மாவட்ட கவுன்சிலர்களுக்கு அழைப்பு விடுப்பதில்லை. குடிநீர், சாலை உள்ளிட்ட பணிகளுக்கும் நிதி ஒதுக்கீடு செய்வதில்லை. அதனால் முடிவடைந்த 3 ஆண்டுகளுடன் எங்களது பதவிக்காலத்தை முடித்துக் கொள்கிறோம் என்று எழுதிக் கொடுத்து விடுங்கள். அதிகாரம் இல்லாமல் பதவியை வைத்திருந்து என்ன பயன் என்றார்.

கந்தசாமி:- இந்தக் கூட்டத்தில் எது பேசினாலும் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. கவுன்சிலர்கள் வந்து பேசி விட்டு செல்லும் வகையிலேயே உள்ளது என்றார்.

தலைவர் திருமாறன் கூறுகையில், அனைத்து கவுன்சிலர்களின் கோரிக்கைகள் குறித்தும் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதில் கவுன்சிலர்கள் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story