கடலூரில் பழக்கடையை அகற்ற கவுன்சிலர்கள் எதிர்ப்பு; அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டம்
கடலூரில் தி.மு.க. கவுன்சிலரின் பழக்கடையை அகற்ற எதிர்ப்பு தொிவித்து, அதிகாரிகளை முற்றுகையிட்டு கவுன்சிலர்கள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
வாக்குவாதம்
கடலூர் மஞ்சக்குப்பம் அண்ணா மார்க்கெட்டை இடித்து விட்டு புதிதாக கட்டும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் மார்க்கெட் அருகில் தேசிய நெடுஞ்சாலையோரம் தி.மு.க. கவுன்சிலர் சுமதி ரங்கநாதன் பழக்கடை வைத்திருந்தார். அந்த கடையை அவர் ஆக்கிரமித்து வைத்துள்ளதாக கூறி, அதை அகற்ற மாநகராட்சி நகரமைப்பு அலுவலர் முரளி தலைமையிலான அதிகாரிகள், ஊழியர்கள் நேற்று சம்பவ இடத்திற்கு பொக்லைன் எந்திரத்தோடு வந்தனர்.
இதை அறிந்த சுமதி, அவரது கணவர் ரங்கநாதன் ஆகியோர் மாநகராட்சி இடத்தில் கடை வைக்கவில்லை. தேசிய நெடுஞ்சாலையோரம் தான் கடை வைத்துள்ளோம். நீங்கள் எப்படி கடையை காலி செய்ய வந்தீர்கள் என்று வாக்குவாதம் செய்தனர்.
முற்றுகை
இதற்கிடையில் அவருக்கு ஆதரவாக தி.மு.க. கவுன்சிலர்கள் பிரகாஷ், தமிழரசன், சரத்தினகரன், பாரூக் அலி, கீர்த்தனா ஆறுமுகம், ராதிகா பிரேம்குமார், கர்ணன் மற்றும் விஜயகுமார் உள்ளிட்ட நிர்வாகிகளும் வந்து, தட்டிக்கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அதிகாரிகளை முற்றுகையிட்டு மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷமிட்டனர்.
தகவல் அறிந்ததும் தேசிய நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் ஸ்ரீதேவி, தொழில்நுட்ப உதவியாளர் கனகராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து, அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இந்த சாலை நகாய் கட்டுப்பாட்டில் வருகிறது. இருப்பினும் இந்த சாலையில் வடிகால் அமைக்கும் பணியை நாங்கள் செய்ய இருக்கிறோம். இதற்காக அந்த பழக்கடையை அகற்ற வேண்டும் என்றனர்.
பரபரப்பு
அதற்கு கவுன்சிலர்கள், சாலையோரம் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்றும் போது, நாங்களே கடையை அகற்றி கொள்கிறோம் என்றனர். இதை கேட்டதும் அவர்கள் அளவீடு செய்து, அனைத்து ஆக்கிரமிப்பு கடைகளையும் விரைவில் அகற்றுவோம் என்று கூறி, திரும்பிச்சென்றனர். இருப்பினும் இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.