தரமற்ற சிமெண்டு சாலைகள் போடப்படுவதாக பொறியாளர் அலுவலகத்தை கவுன்சிலர்கள் முற்றுகை


தரமற்ற சிமெண்டு சாலைகள் போடப்படுவதாக பொறியாளர் அலுவலகத்தை கவுன்சிலர்கள் முற்றுகை
x

திருப்பத்தூர் நகராட்சியில் தரமற்ற தார் சாலைகள் போடப்படுவதாக பொறியாளர் அலுவலகத்தை கவுன்சிலர்கள் முற்றுகையிட்டனர்.

திருப்பத்தூர்

சிமெண்டு சாலை

திருப்பத்தூர் நகராட்சி சார்பில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்ட பல்வேறு தெருக்களில் ரூ.1 கோடி 52 லட்சம் செலவில் நிதி ஒதுக்கப்பட்டு சிமெண்டு சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது.

இந்த நிலையில் 9-வது வார்டு தவுலத் தெருவில் போடப்பட்ட சிமெண்டு சாலைகள் தரமற்ற முறையில் உள்ளதாக பொதுமக்கள் புகார்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து நகராட்சி கவுன்சிலர்கள் அபூபக்கர், சுதாகர், சரவணன், மதன், ரமேஷ், கோபிநாத் ஆகியோர் அப்பகுதிக்கு சென்று போடப்பட்ட சிமெண்டு சாலைகளை பார்த்தனர். அப்போது மிகவும் தரம் குறைந்து உள்ளதை பார்த்து ஒப்பந்ததாரரை அழைத்து எதற்காக இப்படி தரம் குறைத்த சாலைகளை போடுகிறீர்கள் என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வாக்குவாதம்

இதுகுறித்து தகவல் அறிந்து நகராட்சி பணி மேற்பார்வையாளர் கார்த்திகேயன் சம்பவ இடத்திற்கு வந்தார். அவர் கவுன்சிலர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் சிமெண்டு சாலை போடப்படும் என கூறினார்.

அதற்கு உடன்படாத கவுன்சிலர்கள் உடனடியாக பணியை நிறுத்த கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் நகராட்சி பொறியாளர் இதுபோன்று போடப்படும் சாலைகளை பார்வையிட ஏன் வரவில்லை என கேட்டனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு நகராட்சி பொறியாளர் உமாமகேஸ்வரி வரவேண்டும் என கூறினார்கள். அதற்கு அவர் அலுவலகத்தில் பணியில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

பொறியாளர் அலுவலகம் முற்றுகை

இதனால் ஆத்திரமடைந்த கவுன்சிலர்கள் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி பொறியாளர் அலுவலகத்திற்கு சென்றனர். ஆனால் கவுன்சிலர்கள் வருவதை அறிந்து அவர் வெளியே சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால் நகராட்சி கவுன்சிலர்கள் பொறியாளர் வரும் வரை அலுவலகத்தை விட்டு வெளியே செல்ல மாட்டோம் எனக்கூறி முற்றுகையிட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த நகராட்சி தலைவர் சங்கீதா வெங்கடேஷ் பணிகளை நிறுத்தி வைக்க உத்தரவிட்டார். மேலும் உடனடியாக சிமெண்டு சாலை அப்புறப்படுத்தி புதிய சிமெண்டு சாலை அமைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்,

இந்த சம்பவம் திருப்பத்தூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story