கவுன்சிலர்கள் தர்ணா போராட்டம்
மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சி மன்ற அலுவலகம் முன்பு கவுன்சிலர்கள் தர்ணா போராட்டம் நடத்தினா்.
மேல்பட்டாம்பாக்கம்;
மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சி மன்ற அலுவலகத்தில் பேரூராட்சி மன்ற கூட்டம் நடந்தது. இதற்கு பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயமூர்த்தி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சாதிகா அப்துல் அஹது முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மன்ற தீர்மானங்களை அதிகாரி ஒருவர் வாசித்து கொண்டிருந்தார். அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சி கவுன்சிலரான முகமது இத்ரீஸ் என்பவர் எழுந்து வார்டு சபா கூட்டம் நடைபெற்றதாக கூறி அதற்கு சுமார் ரூ.2 லட்சத்திற்கு மேலாக செலவுகள் ஆனதாக பதிவிடப்பட்டுள்ளது. ஆனால் அந்த கூட்டத்திற்கு செலவு முழுவதும் அந்தந்த கவுன்சிலர்கள் தான் செய்திருந்தனர். இந்த நிலையில் கூட்டத்திற்கு எப்படி பொது நிதியிலிருந்து பணம் செலவு செய்யப்பட்டதாக தீர்மானம் நிறைவேற்றலாம் என கேள்வி எழுப்பினார். இது தொடர்பாக மேலும் ஒரு சில கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயமூர்த்தி கூறுகையில், அரசு அறிவுறுத்தலின் பேரில் தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டன என்றார். தொடர்ந்து கூட்டம் முடிந்ததாக அவர் தெரிவித்தார். இதற்கு அ.தி.மு.க. கவுன்சிலர்கள் அர்ச்சுனன், மணிவண்ணன், வசந்த், ஜரினா நவாப், சம்சாத் முஜிபுர் ரஹ்மான், வி.சி.க. கவுன்சிலர் முகமது இத்ரீஸ், த.வா.க. கவுன்சிலர் முத்துகிருஷ்ணன் ஆகிய 7 கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் அவர்கள் பேரூராட்சி மன்ற அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.