மாநகராட்சி கூட்டத்தில் தி.மு.க.-அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வாக்குவாதம்-தள்ளு முள்ளு


மாநகராட்சி கூட்டத்தில் தி.மு.க.-அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வாக்குவாதம்-தள்ளு முள்ளு
x

தஞ்சை கீழவாசல் பகுதியில் பாலம் இடிந்த விவகாரம் தொடர்பாக மாநகராட்சி கூட்டத்தில் தி.மு.க.-அ.தி.மு.க. கவுன்சிலர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அவர்களுக்கிடையே தள்ளு முள்ளுவும் ஏற்பட்டது. எதிர்க்கட்சி கவுன்சிலர்களின் மைக் அணைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூர்

தஞ்சை கீழவாசல் பகுதியில் பாலம் இடிந்த விவகாரம் தொடர்பாக மாநகராட்சி கூட்டத்தில் தி.மு.க.-அ.தி.மு.க. கவுன்சிலர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அவர்களுக்கிடையே தள்ளு முள்ளுவும் ஏற்பட்டது. எதிர்க்கட்சி கவுன்சிலர்களின் மைக் அணைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மாநகராட்சி கூட்டம்

தஞ்சை மாநகராட்சி கூட்டம் மேயர் சண்.ராமநாதன் தலைமையில், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் சரவணகுமார் ஆகியோர் முன்னிலையில் நடந்தது. செயற்பொறியாளர் ஜெகதீசன், மாநகர் நல அலுவலர் டாக்டர் சுபாஷ்காந்தி, உதவி நகரமைப்பு அலுவலர் ராஜசேகர் மற்றும் அதிகாரிகள், அனைத்துக்கட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-

புண்ணியமூர்த்தி(தி.மு.க.):- தற்போது அ.தி.மு.க.வில் பல்வேறு பிரிவுகள் இருப்பதால் இங்குள்ள அ.தி.மு.க. கவுன்சிலர்கள் எந்த அணியில் உள்ளனர்? எதிர்க்கட்சி தலைவர் யார் என கடிதம் கொடுத்துள்ளனரா? என கேள்வி எழுப்பினார்.

இதற்கு மேயர் சண்.ராமநாதன், அடுத்த கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் தொடர்பான கடிதத்தை வழங்க வேண்டும் என்றார்.

கீழவாசல் பாலம் இடிந்த விவகாரம்

கண்ணுக்கினியாள்(அ.ம.மு.க):- தஞ்சை கீழவாசல் ஆதாம் வடிகால் வாய்க்காலில் புதிதாக கட்டப்பட்ட பாலம் சேதமடைந்தது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யார் மீதாவது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதா?.

மேயர் சண்.ராமநாதன்(தி.மு.க.):- கீழவாசலில் ரூ.2.48 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சிறு பாலத்தில் 10 டன் எடையுடன் லாரி கடந்து சென்றதால் அசம்பாவிதம் ஏற்பட்டது. இதற்கான கண்காணிப்பு கேமரா பதிவுகள் உள்ளன. இதுகுறித்து போலீசில் காண்டிராக்டர் புகார் அளித்தார். இதையடுத்து லாரி டிரைவர் தனது தவறை ஒப்புக்கொண்டு அதற்கான செலவு தொகையை தருவதாகக் கூறினார். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

புகைப்படங்களை காட்டிய தி.மு.க.

அப்போது பாலம் தரமில்லாமல் கட்டப்பட்டதால் சேதமடைந்ததாக கண்ணுக்கினியாள் கூறினார். இதற்கு தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட சாந்தபிள்ளை கேட் ரெயில்வே மேம்பாலத்தில் விரிசல் ஏற்பட்டதாகவும், அது மரணப்பாலமாக உள்ளதாகவும் கூறி அதற்கான புகைப்படங்களை அட்டையில் ஓட்டி எடுத்து வந்ததை தி.மு.க. கவுன்சிலர்கள் காட்டியபடி பேசினர்.

மைக் அணைக்கப்பட்டது

அதற்கு அ.தி.மு.க. கவுன்சிலர் சரவணன், நாங்கள் தி.மு.க. கவுன்சிலர்களிடம் கேள்வி கேட்கவில்லை. மேயரிடம் தான் கேள்வி கேட்கிறோம் என தெரிவித்தார். அப்போது எதிர்க்கட்சி தலைவரான மணிகண்டன்(அ.தி.மு.க.) பதிலளித்து பேசிக்கொண்டிருந்தார். சாந்தப்பிள்ளைகேட் மேம்பாலத்தில் முறைகேடு இல்லை. ஏர் கிராக், ஏற்பட்டது சரி செய்யப்பட்டது. தற்போது அதில் போக்குவரத்து முறையாக இயங்கி வருகிறது.

ஆனால் கீழவாசலில், கட்டப்பட்டு 18 நாளிலேயே இடிந்து விழுந்துள்ளது என கூறியபோது அவரது மைக் அணைக்கப்பட்டது. அ.ம.மு.க. கவுன்சிலர் கண்ணுக்கினியாள் மைக்கும் அணைக்கப்பட்டது.

வாக்குவாதம்-தள்ளுமுள்ளு

இதைத்தொடர்ந்து அ.தி.மு.க., அ.ம.மு.க. கவுன்சிலர்களுக்கும், தி.மு.க. கவுன்சிலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இரு தரப்பினரும் கூட்டத்தின் முன்பகுதியில் ஒரே இடத்தில் திரண்டதால் வாக்குவாதம் முற்றி தள்ளு முள்ளு ஏற்பட்டது.

அப்போது அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டதாகவும், கூட்டம் முடிவடைந்து விட்டதாகவும் மேயர் சண்.ராமநாதன் கூறினார். இதையடுத்து இரு தரப்பினரிடையே சிறிது நேரம் வாக்குவாதம் தொடர்ந்தது.

பின்னர் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி கவுன்சிலர்கள், அதிகாரிகள் கூட்ட அரங்கை விட்டு வெளியேறினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story