கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு
சங்கரன்கோவில் நகராட்சி கூட்டத்தில் புதிய பஸ்நிலைய விரிவாக்கத்திற்கு கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் நகராட்சி கூட்டம் நேற்று நடந்தது. நகராட்சி தலைவி உமாமகேஸ்வரி தலைமை தாங்கினார். ஆணையாளர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் 45 தீர்மானங்கள் கவுன்சிலர்களின் ஒப்புதலுக்காக வைக்கப்பட்டிருந்தது.
கூட்டத்தில் துணைத் தலைவர் கண்ணன் மற்றும் தி.மு.க., அ.தி.மு.க., ம.தி.மு.க., காங்கிரஸ் கவுன்சிலர்கள் 21 பேர், நகர வளர்ச்சியை கருத்தில் கொண்டு நகராட்சி அலுவலகம் அருகில் புதிய பஸ்நிலையத்தை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
அப்போது ஆணையாளர் ரவிச்சந்திரன், இதுகுறித்து கவுன்சிலர்கள் முன்பே தெரிவித்து இருக்கலாம். தற்போது பணிகள் டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டிருக்கிறது. இனிமேல் எப்படி மாற்ற முடியும்? என்றார்.
அப்போது தி.மு.க., கவுன்சிலர் வேல்ராஜ், "பஸ்நிலையத்தை இடமாற்றம் செய்வதற்கு முன்பு கவுன்சிலர்களிடம் கருத்து கேட்டீர்களா. மற்றவர்கள் மூலமாக தான் நாங்கள் தெரிந்து கொண்டோம்" என்றார்.
பஸ்நிலையத்தை இடமாற்றம் செய்தால் தான் நகர வளர்ச்சி இருக்கும் என்பது இல்லை, மார்க்கெட்டை இடமாற்றம் செய்தாலும் நகர வளர்ச்சி இருக்கும் என்று தி.மு.க., கவுன்சிலர் செல்வராஜ் தெரிவித்தார்.
அப்போது நகராட்சி அலுவலகம் அருகில் புதிய பஸ்நிலையம் அமைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்ப வேண்டும் என்று 21 கவுன்சிலர்களும் கோரிக்கை விடுத்தனர்.
சங்கரன்கோவிலில் பஸ்நிலைய விரிவாக்க பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் 21 கவுன்சிலர்களின் எதிர்ப்பு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.