கொல்லங்கோடு நகராட்சியில் கவுன்சிலர்கள் 'திடீர்' உள்ளிருப்பு போராட்டம்


கொல்லங்கோடு நகராட்சியில் கவுன்சிலர்கள் திடீர் உள்ளிருப்பு போராட்டம்
x

கொல்லங்கோடு நகராட்சியில் கவுன்சிலர்கள் திடீரென உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கன்னியாகுமரி

கொல்லங்கோடு:

கொல்லங்கோடு நகராட்சியில் கவுன்சிலர்கள் திடீரென உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவசர கூட்டம்

கொல்லங்கோடு நகராட்சியில் அவசர கூட்டம் நேற்று காலை 10 மணியளவில் தொடங்கியது. இதில் நகராட்சி தலைவர் ராணி ஸ்டீபன் மற்றும் ஆணையர், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டம் தொடங்கியதும் கவுன்சிலர்கள் ஆணையர் மீது பல்வேறு புகார்களை கூறினர்.

குறிப்பாக பல்வேறு வளர்ச்சி பணிகள் கிடப்பில் உள்ளதாகவும், தற்காலிக ஊழியர்களை மிரட்டுவதாகவும் கூறினர். இதனால் கோபமடைந்த ஆணையர் ஒரு கட்டத்தில் கூட்டத்தை புறக்கணித்து விட்டு வெளியே சென்றார்.

உள்ளிருப்பு போராட்டம்

இதனால், ஆத்திரமடைந்த தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் நகராட்சி அலுவலகத்தின் முன்பக்கத்தில் வரிசையாக அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து நகராட்சி தலைவர் ராணி ஸ்டீபன் கூறியதாவது:- நகராட்சியில் பல்வேறு பகுதிகளில் பல மாதங்களாக டெண்டர் விடப்பட்ட வளர்ச்சி பணிகள் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. அதற்கான ஆணை பிறப்பிக்காமல் உள்ளது. ஆணையர் நகராட்சி சம்மந்தமான பணிகள் தொடர்பாக தலைவரிடம் எந்த கலந்தாலோசனையும் செய்வதில்லை.

சுமார் 20 ஆண்டுகளாக கலெக்டர் வழிகாட்டுதல் படி தற்காலிக ஊழியராக செயல்பட்டு வருபவர்களை வேலையை விட்டு நீக்குவேன் என மிரட்டுகிறார். இவை குறித்து பேச அவசர கூட்டம் கூட்டப்பட்டது. ஆனால் கூட்டத்திற்கு வந்த ஆணையர் உடனடியாக புறக்கணிப்பு செய்து விட்டார். இதனை கண்டித்து அனைத்து கட்சியையும் சேர்ந்த 33 கவுன்சிலர்களும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இரவிலும் நீடித்தது

இந்த போராட்டம் குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வெகுநேரமாகியும் அதிகாரிகள் யாரும் பேச்சுவார்த்தை நடத்த வரவில்லை. இதனால், உள்ளிருப்பு போராட்டம் இரவிலும் நீடித்தது.



Next Story