சீர்காழி நகரசபை கூட்டத்தில் இருந்து கவுன்சிலர்கள் வெளிநடப்பு


சீர்காழி நகரசபை கூட்டத்தில் இருந்து கவுன்சிலர்கள் வெளிநடப்பு
x

சீர்காழி நகரசபை கூட்டத்தில் இருந்து கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்

மயிலாடுதுறை
சீர்காழி நகரசபை கூட்டம் அதன் தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகர் தலைமையில் நேற்று நடந்தது. துணைத் தலைவர் சுப்பராயன், ஆணையர் ராஜகோபாலன், சுகாதார ஆய்வாளர் செந்தில்ராம்குமார், நகரமைப்பு ஆய்வாளர் நாகராஜன் செல்லத்துரை, வருவாய் ஆய்வாளர் சார்லஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கணக்கர் ராஜகணேஷ் தீர்மானங்களை வாசித்தார்.

கூட்டத்தில், கவுன்சிலர்கள் பேசியதாவது:-

ரம்யா தன்ராஜ்:- எனது வார்டில் கடந்த 5 மாதங்களாக மின்விளக்குகள் எரியவில்லை. ஆகவே, பொது நிதியின் மூலம் மின்விளக்கு எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வள்ளிமாரிமுத்து:- மேட்டுத்தெருவில் சிமெண்டு சாலை அமைத்து தர வேண்டும்.

கழிவுநீர் அகற்றும் வாகனம்

ராஜசேகர்: சீர்காழி நகரசபை பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் நலன்கருதி கழிவுநீர் அகற்றும் வாகனம் வாங்க வேண்டும். நகராட்சியில் டெண்டர் எடுப்பவர்கள் மீது வழக்குப்பதிவு இருக்கிறதா? என்று பார்த்தா டெண்டர் கொடுக்கப்படுகிறது. குறைந்த விலையில் டெண்டர் கேட்பவர்களுக்கு டெண்டர் கொடுப்பதுதான் முறையாகும்.

முழுமதி இமயவரம்பன்:- எனது வார்டில் பள்ளி கட்டிடம் மற்றும் சத்துணவு கூடம் பழுதடைந்துள்ளது. பனமங்கலம் பகுதி மக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்க வேண்டும்.

சுவாமிநாதன்:- பழைய பஸ் நிலையத்தில் உள்ள கட்டணக் கழிப்பறையில் கழிவுநீர் வெளியேறி தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. அதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கவுன்சிலர் ரமாமணி:- நகராட்சி முழுவதும் வளர்ச்சி பணிகளை விரைவு படுத்த வேண்டும்.இவ்வாறு கவுன்சிலர்கள் பேசினர்.அதற்கு பதில் அளித்து பேசிய தலைவர் உறுப்பினர்களின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

வாக்குவாதம்


தொடர்ந்து ஈசானிய தெருவில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் மின்சார சுடுகாட்டுக்கு டெண்டர் விடுவது தொடர்பாக கவுன்சிலர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் கூட்டத்தில்பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாலமுருகன், முழுமதி இமயவரம்பன், ராமு, ராஜேஷ், நித்யாதேவி, வள்ளி, கலைச்செல்வி, ரம்யா, ரேணுகாதேவி ஆகிய 9 கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.








Next Story